PAK vs ZIM 2nd Test: ஹசன், நௌமன் அபாரம்; தோல்வியின் விளிம்பில் ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹராரேவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, அபித் அலி, அசார் அலி ஆகியோரது அபார சதத்தால் முதல் இன்னிங்ஸில் 510 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த நிலையில், 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் அடித்திருந்தது.
அதன்பின் இன்று 3ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஜிம்பாப்வே அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் ஜிம்பாப்வே அணி 132 ரன்களுக்கே ஆல் அவுட்டாகி பாலோ ஆன் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் அலி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 378 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாப்வே அணி, இந்த இன்னிங்ஸிலும் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இருப்பினும் அணியின் விக்கெட் கீப்பர் ரெஜிஸ் சகாப்வா மட்டும் நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். பின்னர் அவரும் 80 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 9 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. பாகிஸ்தான் அணி தரப்பில் நௌமன் அலி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து நாளை நடைபெற உள்ள நான்காம் நாள் ஆட்டத்தின் ஒரு சில ஓவர்களில் பாகிஸ்தான் அணியின் வெற்றி உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.