அகமதாபாத்தில் விளையாடுவதில் இருந்து ஏன் பின்வாங்குகிறீர்கள்? - ஷாஹின் அஃப்ரிடி காட்டம்!

Updated: Sat, Jun 17 2023 15:30 IST
Shahid Afridi Questions Pakistan Cricket Board Over World Cup Stance (Image Source: Google)

அரசியல் காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை பல ஆண்டுகளாகத் தவிர்த்து வருகின்றன. மேலும் ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதியும் வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடப்பதாக இருந்தது. ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் தன்னால் பாகிஸ்தான் செல்ல முடியாது என்று அறிவித்துவிட்டது.

தற்பொழுது ஆசியக் கோப்பை தொடரில் நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும் ஒன்பது போட்டிகள் இலங்கையிலும் நடைபெறுவதற்கு பாகிஸ்தான் சம்மதித்திருக்கிறது. ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலும் இதை ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அக்டோபர் நவம்பர் மாதத்தில் இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க இருக்கின்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணி விளையாடுவதாக செய்திகள் வெளிவந்தன.

இதற்கு பாகிஸ்தான் தரப்பிலிருந்து எங்களால் குஜராத்தில் விளையாட முடியாது. தென்னிந்தியாவில் விளையாடவே நாங்கள் விரும்புகிறோம் என்று சொல்லப்பட்டது. தற்பொழுது இது குறித்து மிகக் காட்டமாக பாகிஸ்தான அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் வீரருமான ஷாஹித் அஃப்ரிடி பேசி இருக்கிறார். 

இதுகுறித்து பேசிய அவர், “குஜராத் அகமதாபாத் மைதானத்தில் விளையாடுவதில் இருந்து ஏன் பின்வாங்குகிறீர்கள்? அந்த ஆடுகளம் தீயை வீசுமா? இல்லை அந்த ஆடுகளத்தில் பேய் இருக்கிறதா? போய் விளையாடு ; வெற்றி பெறு! இறுதியில் முக்கியமானது பாகிஸ்தான் அணியின் வெற்றிதான். இதில் இருக்கின்ற முக்கிய விஷயமே இதுதான். 

இந்திய அணிக்கு அந்த மைதானம் சாதகமாக இருக்கும் என்றால், நீங்கள் அங்கு சென்று விளையாடி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நிரம்பி இருக்கின்ற இடத்தில் வெற்றியை உங்கள் பக்கம் இழுக்க வேண்டும். நீங்கள் வெற்றி பெற்றதை அவர்களுக்குக் காட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை