பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகினார் அஃப்ரிடி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. பின்னர் கரோனா பரவல் காரணமாக இத்தொடர் உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து இத்தொடரை ஜூன் 5ஆம் தேதி முதல் நடத்த பிசிபி முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் பாகிஸ்தானில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா தொற்றால், தொடரை வேறு நாட்டில் நடத்த பிசிபி முடிவு செய்தது.
இதற்கிடையில் பிஎஸ்எல் தொடரின் 6ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான வேளைகளில் பிஎஸ்எல் அணிகள் இறங்கியுள்ளன.
இதில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி, முல்தானின் சுல்தான் அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகுவதாக அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஃப்ரிடி கூறுகையில், “பயிற்சி ஆட்டத்தின் போது எனது முதுகு பகுதியில் காயமடைந்ததாக உணர்ந்தேன். அதன்பின் மருத்துவரை அணுகியபோது நான் காயமடைந்திருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக நான் ஓய்வில் இருக்க வேண்டியது அவசியம் என்பதால், பிஎஸ்எல் தொடரில் என்னால் பங்கேற்க இயலாது” என்று தெரிவித்துள்ளார்.