பந்துவீச்சு சோதனையில் தேர்ச்சியடைந்த ஷாகிப் அல் ஹசன்!

Updated: Thu, Mar 20 2025 11:41 IST
Image Source: Google

வங்கதேச அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன். இவர் கடந்த 2006ஆம் ஆண்டு வங்கதேச அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானது முதல் தற்போதுவரையிலும் அந்த அணியின் மிகச்சிறந்த ஆல் ரவுண்டராக பார்க்கப்படுகிறார்.

அதன்படி வங்கதேச அணிக்காக இதுவரை 71 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள், 31 அரைசதங்கள் என 4609 ரன்களையும், 246 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். மேற்கொண்டு 247 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 9 சதங்கள் 56 அரைசதங்களுடன் 7570 ரன்களையும், 317 விக்கெட்டுகளையும், கைப்பற்றியுள்ள அவர் டி20 கிரிக்கெட்டில் 129 போட்டிகளில் 13 அரைசதங்களுடன் 2551 ரன்களையும், 149 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

இந்நிலையில் தற்போது 37 வயதான ஷாகிப் அல் ஹசன் பந்துவீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். கடந்தாண்டு செப்டம்பர் 2024 இல் சோமர்செட்டுக்கு எதிராக சர்ரே அணிக்காக கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடியபோது ஷகிப் அல் ஹசனின் பந்துவீச்சு நடவடிக்கை கேள்விக்குறியானது. அதன் பின்னர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அவரது பந்துவீச்சு நடவடிக்கை தவறானது என்று அறிவித்தது.

மேலும் சந்தேகத்திற்கிடமான பந்துவீச்சு நடவடிக்கை காரணமாக பல மாதங்களாக கிரிக்கெட்டிலிருந்து விலகி இருந்தன் காரணமாக ஷாகிப் அல் ஹசனால் சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான வங்கதேச அணியிலும் இடம்பிடிக்க முடியாமல் போனது. மேலும் அவரை ஒரு பேட்டராக கூட இந்த தொடரில் அந்த அணி தேர்வு செய்யவில்லை. அது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகவும் அமைந்தது.

முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிக்கும் திட்டத்தில் ஷாகிப் அல் ஹசன் இருந்தார். ஆனால் அவரால் இத்தொடரில் பங்கேற்க முடியாததன் காரணமாக தற்போது வரை ஓய்வை அறிவிக்காமல் உள்ளார். இதற்கிடையில் அவருக்கு நடைபெற்ற பந்துவீச்சு சோதனையிலும் இரண்டு முறை தோல்வியைத் தழுவிய அவர், மூன்றாவது தேர்வில் தனது பந்துவீச்சு சோதனையில் தேர்ச்சியடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில் சோதனையில் தேர்ச்சி பெற்றது குறித்து பேசிய ஷாகிப் அல் ஹசன், “எனது பந்துவீச்சு தேர்வில் நான் தேர்ச்சியடைந்ததாக வெளியான செய்தி சரியானது தான். மேலும் எனக்கு மீண்டும் பந்து வீச அனுமதி கிடைத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்தாண்டு இந்திய டெஸ்ட் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடிய ஷாகிப் அல் ஹசன் அத்தொடருடன் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை