டி20 கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த ஷாகிப் அல் ஹசன்!
பங்களதேஷ் பிரீமியர் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 5ஆவது லீக் ஆட்டத்தில் ஃபார்ச்சூன் பாரிஷால் - மினிஸ்டர் குரூப் தாக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான ஃபார்ச்சூன் பாரிஷால் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து இலக்கை துரத்திய மினிஸ்டர் குரூப் அணி 17.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஃபார்ச்சூன் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இப்போட்டியில் ஃபார்ச்சூன் அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மஹ்முதுல்லாவின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது 400ஆவது விக்கெட்டை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
மேலும் இந்த சாதனையை செய்யும் முதல் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் எனும் பெருமையையும் அவர் பெற்றார். அதேபோல் டி20 கிரிக்கெட்டில் இச்சாதனையைப் படைக்கும் 5ஆவது பந்துவீச்சாளர் எனும் சாதனையும் இதில் அடங்கும்.
இந்தப்பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் டுவன் பிராவோ 554 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹீர் 435 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் சுனில் நரைன் 425 விக்கெட்டுகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.