டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஷகிப் அல் ஹசன்!
வங்கதேசம் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டி20 போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 123 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 62 ரன்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 60 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இப்போட்டியில் வங்கதேச அணி வீரர் ஷகிப் அல் ஹசன் 9 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதையும் தன்வசப்படுத்தினார்.
இப்போட்டியில் ஆஷ்டன் டர்னரின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் ஷகிப் அல் ஹசன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 100ஆவது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் மற்றும் 1000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தினார்.