என்னால் மைதானத்திற்கு கூட வர முடியாத நிலைமை இருந்தது - ஷமார் ஜோசப்!

Updated: Sun, Jan 28 2024 19:25 IST
என்னால் மைதானத்திற்கு கூட வர முடியாத நிலைமை இருந்தது - ஷமார் ஜோசப்! (Image Source: Google)

வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரர் ஷமார் ஜோசப் அபாரமாக பந்துவீசி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் அவர் இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும், இத்தொடரின் தொடர் நாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டார். 

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய அவர், “இந்த வெற்றி உண்மையில் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. என்னுடைய அணி வீரர்கள் கொடுத்த ஆதரவுக்கும், அன்புக்கும் எனது நன்றிகள். எனது காலில் காயம் இருந்தாலும், என் வலியைக் கடந்து நான் இங்கு எனது நாட்டிற்காக வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளேன். எங்களால் இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்ய முடியும் என்று நம்பிய அனைவருக்கும் நான் எனது நன்றியைக் கூறிக்கொள்கிறேன். 

இன்று என்னால் மைதானத்திற்கு கூட வர முடியாத நிலைமை இருந்தது. அப்போது மருத்துவர் என்னிடம் நீ எப்படி இருக்கிறாய் என்று கேட்டறிந்தார். அதற்கு நான் இன்னும் எனது பாதங்களில் வலி உள்ளது, என்னால் விளையாட முடியுமா என்று தெரியவில்லை என்று கூறினேன். ஆனால் அவர் எனக்கு ஒருசில சிகிச்சைகளை மேற்கொண்டு என்னை நடக்கவைத்தார். மேலும் அவர் கொடுத்த உத்வேகம் எனக்கு பந்துவீச்சில் உதவியாக இருந்தது. 

இப்போட்டியில் விக்கெட்டுகளை எடுக்க எடுக்க எங்களால் இப்போட்டியில் வெற்றிபெற முடியும் என்ற என்ணம் இருந்தது. அதிலும் இப்போட்டியில் நான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய போதே நான் கண்களங்கி மைதானத்திலேயே அழ தொடங்கினேன். அதன்பின் சீனியர் வீரர்கள் அல்ஸாரி ஜோசம், கீமார் ரோச் ஆகியோர் எனக்கு முழு சுதந்திரத்தைக் கொடுத்து பந்துவீச அனுமதித்தனர். 

இப்போட்டியில் வென்று 1 - 1 என்ற கணக்கில் சமன் செய்ததே தொடரை வென்றது போன்ற உணர்வை கொடுக்கிறது. ஏனெனில் இன்றைய நாள் தொடக்கத்தின் போதே எங்கள் கேப்டனிடம் நான் எதிரணியின் கடைசி விக்கெட் கிடைக்கும் வரை என்னுடைய பாதம் எப்படி இருந்தாலும் நான் பந்து வீச தயார் என்று கூறினேன். அவருக்காக அதைனை நான் செய்ததில் பெருமையடைகிறேன். நான் எப்போதும் மூத்த வீரர்களின் அறிவுரையைப் பின்பற்றி அவர்களின் ஆலோசனை படியே நடந்துகொண்டேன். அது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது" என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை