ஐபிஎல் 2022: வார்னேவுக்கு மரியாதை; புதிய ஜெர்சியில் களமிறங்கும் ராஜஸ்தான்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், சாம்பியன் பட்டத்தை பெற்றுத்தந்தவருமான மறைந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இன்று நடக்கும் ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் வித்தியாசமான ஜெர்ஸியில் களமிறங்குகிறார்கள்
கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடர் தொடங்கப்பட்டபோது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக ஷேன் வார்ன் நியமிக்கப்பட்டு, முதல் முறையிலேயே சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக்கொடுத்தார். லெக்ஸ்பின்னில் ஜாம்பவானான ஷேன் வார்ன் கடந்த மார்ச் 4ஆம் தேதி தாய்லாந்தில் சுற்றுலா ஓய்வுநாட்களை கழிக்கச் சென்றபோது உயிரிழந்தார்.
ஷேன் வார்னின் புகழாஞ்சலி செலுத்தும்வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் இன்று SW23 என்ற எண் அச்சிடப்பட்ட ஜெர்ஸியை அணிந்து களமிறங்குவார்கள். இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர், இந்தியாவின் ரவிச்சந்திர அஸ்வினும் இந்த ஆடையை அணிய உள்ளனர்
ஷேன் வார்னுக்கும் 23ஆம் எண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வார்னேயின் குழந்தைப் பருவத்தில் கால்பந்துவீரர் டெர்மோட் பெரிட்டன் அணிந்த ஆடையின் எண் என்பதால் விரும்பி அணிந்தார். மேலும் இன்று போட்டி நடக்கும் மைதானத்தின் ஒரு பகுதியில் வார்னேயின் நினைவுகளை கூறும் அரங்கும் அமைக்கப்பட்டிருக்கும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது 12 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தில் இருக்கிறது. மும்பைக்கு எதிரான இந்த ஆட்டத்தில் வென்றால், குஜராத் டைட்டனை கீழிறக்கி முதல் இடத்தைப் பிடிக்கும்.