ஜூலன் கோஸ்வாமி ஒரு லெஜண்ட் - சவுரவ் கங்குலி புகழாரம்!
தற்பொது 39 வயதான ஜூலான் கோஸ்வாமி இந்திய அணிக்காக 12 டெஸ்ட், 68 டி20 மற்றும் 203 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டும் இந்திய மகளிர் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமான ஜூலன் கோஸ்வாமி, சர்வதேஅ ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார்.
நெடு நாட்களாக அவரது ஓய்வு முடிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில், கடைசியாக அவர் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை தொடரில் விளையாடி இருந்தார். அதன் பிறகு தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். மேலும் இத்தொடருடன் தாம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 10 ஓவர்கள் முழுவதுமாக வீசி வெறும் 20 ரன்களை தான் கொடுத்திருந்தார். இதில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார்.
இந்தச் சூழலில்தான் அவரது ஓய்வு குறித்து கங்குலி அறிவித்துள்ளார். “ஜூலான் கோஸ்வாமியை எண்ணி நான் மகிழ்கிறேன். கடந்த 2 போட்டிகளில் அவரது செயல்பாடு அற்புதம். இந்திய அணி அந்த இரண்டிலும் வெற்றி வாகை சூடி இருந்தது. அவர் ஒரு லெஜெண்ட். மகளிர் கிரிக்கெட் மேம்பாடு குறித்து அவருடன் நிறைய பேசி உள்ளேன்.
நானும், அவரும் வங்காள மண்ணை சேர்ந்தவர்கள் என்பதில் பெருமிதம். அவரது கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் அமைந்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட்டை நிறைவு செய்வது கனவு போன்றது.
எனது மகள் கிரிக்கெட் விளையாட விரும்பினால் ஜூலான் கோஸ்வாமியை போல வர வேண்டும் என நான் நிச்சயம் சொல்வேன். ஆனால், அவள் கிரிக்கெட் விளையாடுவதில்லை” என தெரிவித்துள்ளார்.