ஐபிஎல் 2022: ஹர்திக் பாண்டியாவிற்கு வார்னிங் கொடுத்த அக்தர்!
இந்திய கிரிக்கெட்டில் அடுத்த கபில் தேவாக பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, ஃபிட்னெஸ் பிரச்னையால் கடந்த 2 ஆண்டுகளில் பெரும்பாலான போட்டிகளை தவறவிட்டார். இந்திய அணியின் நட்சத்திர வீரராக, அதிரடி ஆல்ரவுண்டராக தனக்கென நிரந்தர இடத்தை பிடித்து வைத்திருந்த ஹர்திக் பாண்டியா, அதை இந்த 2 ஆண்டில் தவறவிட்டார்.
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவின் ஆல்ரவுண்டர் இடத்திற்கு தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், வெங்கடேஷ் ஐயர் ஆகிய வீரர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர்.
ஹர்திக் பாண்டியாவை வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பாத இந்திய அணி, அவர் ஃபிட்னெஸை அடைந்தபோதிலும் அவரை அணியில் எடுக்காமல், அவர் முழுக்க முழுக்க 100 சதவிகித ஃபிட்னெஸை அடைய ஏதுவாக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பிவைத்தது. அங்கு கடும் பயிற்சியில் ஈடுபட்ட ஹர்திக் பாண்டியா, பந்துவீசுமளவிற்கான முழுமையான ஃபிட்னெஸுடன் ஐபிஎல்லுக்கு திரும்பினார்.
ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன்சியையும் ஹர்திக் பாண்டியா ஏற்றிருந்ததால் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் பாண்டியா இடம்பிடிக்க வேண்டுமென்றால், இந்த ஐபிஎல் சீசன் அவருக்கு மிக முக்கியமானது. இந்த சீசனில் அவர் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய மூன்றிலும் ஒரு ஆல்ரவுண்டராக எப்படி ஆடுகிறார் என்பதை பொறுத்துத்தான் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைப்பது தீர்மானிக்கப்படும்.
அந்தவகையில், இந்த ஐபிஎல் சீசனில் அவர்மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே ஹர்திக் பாண்டியா அசத்திவந்தார். குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங், கேப்டன்சி என அனைத்துவகையிலும் பட்டைய கிளப்பினார் பாண்டியா.
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் மற்றவீரர்கள் சொதப்பிய நிலையில், 52 பந்தில் 87 ரன்களை குவித்து, குஜராத் டைட்டன்ஸ் அணி 192 ரன்களை குவிக்க உதவினார் பாண்டியா. பவுலிங்கில் 2.3 ஓவர்கள் பந்துவீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தியதுடன், ஃபீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு சஞ்சு சாம்சனை ரன் அவுட் செய்தார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங், கேப்டன்சி என அனைத்து வகையிலும் அசத்திய ஹர்திக் பாண்டியா தான் அந்த போட்டியின் ஆட்டநாயகன்.
அந்த போட்டியில் அருமையாக விளையாடிய ஹர்திக் பாண்டியா, சிஎஸ்கேவிற்கு எதிரான அடுத்த போட்டியில் காயம் காரணமாக ஆடவில்லை. எனவே ரஷீத் கான் தான் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டார். ஹர்திக் பாண்டியா மீண்டும் காயத்தால் சிஎஸ்கேவிற்கு எதிராக ஆடாதது, அவரது ஃபிட்னெஸ் மீதான சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து சோயப் அக்தர் கருத்து கூறியுள்ளார். அக்தர் ஏற்கனவே பலமுறை, ஹர்திக் பாண்டியா சதை போடாமல் மிகவும் ஒல்லியாக இருப்பது அவரது ஃபிட்னெஸ் பிரச்னைக்கு காரணம் என்பதை சுட்டிக்காட்டியிருக்கும் நிலையில், அதை அவரிடமே நேரடியாக சொன்ன சம்பவத்தை பற்றி பகிர்ந்துள்ளார் அக்தர்.
இதுகுறித்து பேசிய சோயப் அக்தர், “துபாயில் பும்ராவிடம் நான் அதை கூறியிருக்கிறேன். ஹர்திக் பாண்டியாவிடமும் கூறியிருக்கிறேன். அவர்கள் இருவருமே பறவைகளை போற மெலிந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு பின்புறத்தில் சதையே கிடையாது. தோள்பட்டைக்கு பின்னால் நான் இப்போதும் கூட வலுவான சதைகளை பெற்றிருக்கிறேன். பாண்டியாவை ஒருமுறை தொட்டுப்பார்த்தேன். அவர் மிக ஒல்லியாக இருக்கிறார். அவர் காயமடைய வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கவும் செய்தேன். ஆனால் அவர், நான் அதிக கிரிக்கெட் ஆடியிருக்கிறேன் என்றார். ஆனால் அதே போட்டியிலேயே அவர் காயமடைந்தார்” என்று தெரிவித்துள்ளார்.