ஐபிஎல் 2022: குர்னால் பாண்டியாவை வசைபாடும் ரசிகர்கள்!
ஐபிஎல் 15ஆவது சீசன் மும்பை இந்தியன்ஸுக்கு கொடுங்கனவாக அமைந்திருக்கிறது. 5 முறை சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் படுமோசமாக விளையாடி தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது.
இந்த சீசனில் ஆடிய 8 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 8 போட்டிகளில் ஒன்றில் கூட மும்பை அணி ஜெயிக்காதது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக 8 தோல்விகளின் காரணமாக இந்த சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறுவது உறுதியாகிவிட்டது.
மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 169 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் பொல்லார்டை அவுட்டாக்கிவிட்டு லக்னோ அணி பவுலர் க்ருணல் பாண்டியா பொல்லார்டுக்கு முத்தம் கொடுத்தார்.
க்ருணலும் பொல்லார்டும் மும்பை அணிக்காக பல ஆண்டுகள் இணைந்து ஒன்றாக ஆடியிருப்பதால் இருவரும் நல்ல நண்பர்கள். அதனடிப்படையில், பொல்லார்டை அவுட்டாக்கியபின்னர் தலையில் முத்தம் கொடுத்து அனுப்பிவைத்தார். ஆனால் மும்பை அணி 8ஆவது தோல்வியை தழுவப்போகிறது. தன்னால் அணிக்கு வெற்றி தேடித்தர முடியாமல் அவுட்டாகிவிட்டோம் என்று எந்தளவிற்கு பொல்லார்டு வருந்தியிருப்பார் என்பதை கருத்தில்கொள்ளாமல் தனது மகிழ்ச்சியை அவருக்கு முத்தம் கொடுத்துகொண்டாடினார் க்ருணல் பாண்டியா.
இதைக்கண்டு அதிருப்தியடைந்த ரசிகர்கள், பொல்லார்டு ஏற்கனவே ஒருமுறை ஐபிஎல்லில் கோபம் வந்தபோது பேட்டைவிட்டு எறிந்ததைப்போல, க்ருணலுக்கும் அடியை போட்டிருக்க வேண்டும் என்றும், க்ருணல் பாண்டியாவின் செயலை விமர்சித்தும் பதிவிட்டுவருகின்றனர்.