கில், ஜெய்ஸ்வால் மீது எந்த சந்தேகமும் இல்லை - ஹர்திக் பாண்டியா!

Updated: Sun, Aug 13 2023 16:26 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஹெட்மையரின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ஹெட்மையர் 61 ரன்கள் சேர்த்தார்.

இதன்பின் சவாலாக இலக்கை நோக்கி களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் சாதனை படைத்து அசத்தல் பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அனைத்து ஓவர்களிலும் பவுண்டரி, சிக்சர் அடிக்கப்பட்டு கொண்டே இருந்தது. இதனால் இந்திய அணி 17 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மிரட்டல் வெற்றியை பெற்றது. சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 84 ரன்களும், ஷுப்மன் கில் 47 பந்துகளில் 77 ரன்களும் குவித்தனர்.

இந்த வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “இந்தப் போட்டியை பார்க்க ஏராளமான இந்திய ரசிகர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு சிறந்த ஆட்டத்தை பார்த்த மகிழ்ச்சி இருக்கும் என்று நினைக்கிறேன். ஷுப்மன் கில் மற்றும் யஷஸ்வி இருவரின் திறமை மீதும் எங்களுக்கு கொஞ்சம் கூட எந்த சந்தேகமும் இல்லை. என்னை பொறுத்தவரை பேட்ஸ்மேன்கள் குழுவாக இணைந்து பொறுப்பேற்று, பந்துவீச்சாளர்களுக்கு உதவ வேண்டும். ஏனென்றால் கிரிக்கெட்டின் எந்த வடிவமாக இருந்தாலும் பந்துவீச்சாளர்களால் தான் வெற்றியை கொடுக்க முடியும்.

அவர்கள் 2 விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினால், ஆட்டத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும். அதேபோல் இந்த அனலில் இரு பேட்ஸ்மேன்கள் ஓடி அதிக ரன்கள் சேர்த்தது பாராட்டுக்குரியது. அதேபோல் ஆட்டத்தை முடிக்கும் பொறுப்பையும் எடுத்தது மகிழ்ச்சியே. நான் எப்போதும் உள்ளுணர்வின் அடிப்படையிலேயே கேப்டன்சியை அணுகுவேன். நாங்கள் முதல் இரு போட்டிகளில் தோல்வியடைந்ததற்கு, எங்களின் தவறுகளே காரணம். இரு போட்டிகளிலும் கடைசி 4 ஓவர்களில் சொதப்பி தோல்வியை அடைந்தோம்.

ஆனால் அடுத்த 2 போட்டிகளில் வெற்றிபெற்ற போதும் பெரிதாக எதையும் மாற்றிடவில்லை. இங்கு விளையாடிய அனைத்து போட்டிகளுமே எங்களின் மன உறுதியை அதிகரித்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் அனைத்து அணிகளும் அபாயகரமானவை. எப்போதும் எதிரணியை மதிக்க வேண்டும். 2-0 என்ற நிலையில் இருந்து 2-2 என்ற கொண்டு வந்திருக்கிறோம். மீண்டும் வெற்றிபெறுவோம் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை