இலங்கை அண்டர் 19 அணிக்கு பயிற்சியாளராக ஜெயவர்த்தனே? ஆலோசனையில் இலங்கை கிரிக்கெட் வாரியம்!
கடந்த 20 ஆண்டுகளில் இலங்கை அணி ஜெயசூர்யா, சங்கக்காரா, மலிங்கா, ஜெயவர்த்தனே, தில்சன் என பல ஜாம்பவான்காளை உள்ளடக்கிய அணியாகவும், சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் வலிமை வாய்ந்த அணியாகவும் திகழ்ந்தது.
ஆனால் அவர்களுக்கு பிறகு இலங்கை அணியின் தற்போதைய நிலையானது, அகல பாதாளத்திற்கு சென்றுள்ளது. திறமையான வீரர்கள் அணியில் இருந்தாலும் அவர்களால் தொடர்ந்து சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்த முடியாததே அந்த அணி சரிவிற்கு காரணமாக அமைந்துள்ளது.
இதன் விளையவாக நடப்பாண்டு உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் தகுதி சுற்று போட்டிகளில் விளையாடும் அளவிற்கு இலங்கை அணி தள்ளப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு அண்டர் 19 அணிகளுக்கு அனுபவம் வாய்ந்த பயிற்சியாளரை நியமிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
அதன்படி அந்த அணியின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவானுமான மஹிலா ஜெயவர்த்தனேவை இலங்கை அண்டர் 19 அணியின் பயிற்சியாளராக நியமிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து பேசிய அந்த அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா,“இந்திய அணி ராகுல் டிராவிட்டை அண்டர் 19 அணிக்கு பயிற்சியாளராக நியமித்து, தற்போது பெரும் பலனை அடைந்துள்ளது. அவரது பயிற்சியின் கீழ் விளையாடிய பல்வேறு வீரர்கள் தற்போது சர்வதேச அரங்கில் பல சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.
அதுபோலவே இலங்கை அணியும் இனி வரும் காலத்தில் கிரிக்கெட்டில் கொலொச்சி நிற்க ஜெயவர்த்தனேவை அண்டர் 19 அணிக்கு பயிற்சியாளராக நியமிக்க ஆலோசித்து வருகிறது. ஏனெனில் வீரர்களை அண்டர் 19 மட்டத்திலிருந்து ஊக்கப்படுத்தி, அவர்களில் திறமையை வெளிப்படுத்த இது பெரும் உதவியாக அமையும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.