IND vs SL : தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா; தோல்வியை தவிர்குமா இலங்கை?
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டிபோட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கிறது.
இந்திய அணி
தொடரின் முதல் ஆட்டத்தில் 164 ரன்கள் சேர்த்த இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், கேப்டன் ஷிகர் தவான் ஆகியோரின் பேட்டிங் நேர்த்தியாக இருந்தது. இதே போல் பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட் வீழ்த்தி கலக்கினார்.
தொடக்க வீரர் பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதனால் அவர்கள் விரைவில் இங்கிலாந்துக்கு கிளம்ப இருக்கிறார்கள். எனவே இன்றைய ஆட்டத்தில் விளையாடி விட்டு கடைசி ஆட்டத்தில் அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பந்து வீச்சை பொறுத்தவரை டி20 உலக கோப்பை அணிக்கான இடத்துக்கு குறி வைத்துள்ள சுழற்பந்து வீச்சாளர்கள் யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதில் தீவிரம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணி
தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணியில் அனுபவ வீரர்கள் இல்லாதது அந்த அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. அதனால் தொடக்க ஆட்டத்தில் கடைசி 15 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 126 ரன்னில் சுருண்டது.
சாரித் அசலங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோரைத் தவிர அந்த அணியில் மற்றவர்களின் பேட்டிங் எடுபடவில்லை. ஏற்கனவே ஒரு நாள் தொடரை பறிகொடுத்துவிட்ட இலங்கை அணி டி20 தொடரை வெல்லும் முனைப்பில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச அணி
இந்தியா: பிரித்வி ஷா, தவான் (கேப்டன்), சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், குருணல் பாண்ட்யா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்ரவர்த்தி.
இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, மினோத் பானுகா, தனஞ்ஜெயா டி சில்வா, அசலங்கா அல்லது சமரவிக்ரமா, அஷென் பண்டாரா, ஷனகா, (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, உதனா, சமீரா, அகிலா தனஞ்ஜெயா.