SL vs AUS, 1st ODI: மழையால் தடைப்பட்ட ஆட்டம்!
இலங்கை - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என வென்றது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடக்கிறது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று நடக்கிறது. பகலிரவு போட்டியாக நடக்கும் இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது.
முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் குணதிலகா - நிசாங்கா இணைந்து சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவருமே அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 115 ரன்களை குவித்து கொடுத்தனர். குணதிலகா 55 ரன்னிலும், நிசாங்கா 56 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
3ம் வரிசையில் இறங்கிய குசால் மெண்டிஸ் ஒருமுனையில் நிலைத்து நின்று நங்கூரம் போட்டு பொறுப்புடன் ஆட, தனஞ்செயா டி சில்வா 7 ரன்னில் ஆட்டமிழந்தாலும், 4ஆவது விக்கெட்டுக்கு மெண்டிஸுடன் ஜோடி சேர்ந்த அசலங்கா சிறப்பாக ஆடி 37 ரன்கள் அடித்தார். தசுன் ஷனாகா(6) மற்றும் சாமிகா கருணரத்னே(7) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
இதற்கிடையே அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார் குசால் மெண்டிஸ். பின்வரிசையில் இறங்கிய வனிந்து ஹசரங்கா 19 பந்தில் 6 பவுண்டரிகளுடன் 37 ரன்களை விளாசி சிறப்பாக முடித்து கொடுத்தார். குசால் மெண்டிஸ் 86 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். 50 ஓவரில் 300 ரன்களை குவித்த இலங்கை அணி, 301 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்தது.
இதையடுத்து இலக்கை துரத்தி விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணி 12.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் சேர்த்த நிலையில் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்னும் 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி போட்டியை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை தொடர்ந்து மழை நீடித்தால் ஆட்டம் டக்வெர்த் லூயிஸ் முறையில் போட்டியின் இலக்கு மற்றும் ஓவர்கள் குறைக்கப்படும், இல்லையெனில் ஆட்டம் ரத்தானதாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.