SL vs BAN, 3rd ODI: குசால் மெண்டிஸ் அபார சதம்; வங்கதேசத்திற்கு 286 ரன்கள் டார்கெட்!
SL vs BAN, 3rd ODI: வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் குசால் மெண்டிஸ் சதமடித்து அசத்தியுள்ளார்.
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் வங்கதேச அணி தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளன. இதையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் ஒருநாள் போட்டி இன்று (ஜூலை 08) நடைபெற்றது. பல்லகலேவில் உள்ள பல்லகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் நிஷான் மதுஷ்கா ஒரு ரன்னுடன் பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த பதும் நிஷங்கா - குசால் மெண்டிஸ் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியது. இதில் இருவரும் இணைந்து 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், பதும் நிஷங்கா 35 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸும் 16 ரன்களுடன் நடையைக் கட்டினார். அதனைத்தொடர்ந்து குசால் மெண்டிஸுடன் இணைந்த கேப்டன் சரித் அசலங்காவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்ந்தது.
Also Read: LIVE Cricket Score
இதில் குசால் மெண்டிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 6ஆவது சதத்தைப் பதிவுசெய்த நிலையில், சரித் அசலங்காவும் அரைசதம் கடந்தார். அதன்பின் 58 ரன்களுடன் சரித் அசலங்கா ஆட்டமிழந்த நிலையில், 18 பவுண்டரிகளுடன் 124 ரன்களைச் சேர்த்த கையோடு குசால் மெண்டிஸும் விக்கெட்டை இழந்தனர். இதன் காரணமாக இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 285 ரன்களைச் சேர்த்துள்ளது. வங்கதேச அணி தரப்பில் தஸ்கின் அஹ்மத் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.