SL vs AUS, 1st test: இரண்டரை நாளில் முடிந்த கலே டெஸ்ட்; ஆஸி அசத்தல் வெற்றி!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 3 டி20, 5 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இதில் டி20 தொடரை ஆஸ்திரேலியாவும், ஒருநாள் தொடரை இலங்கை அணியும் கைப்பற்றின.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேற்று முந்தினம் கலேவில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லையன் 5 விக்கெட்டுகளையும், ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகளையும், கம்மின்ஸ், ஸ்டார்க் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், மார்னஸ் லபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்களை எடுத்தது.
இதையடுத்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியில் அந்த அணியில் உஸ்மான் கவாஜா 47 ரன்களுடனும், ட்ராவிஸ் ஹெட் 6 ரன்காளுடனும் தொடக்கம் தந்தனர். இதில் ட்ராவிஸ் ஹெட் மேற்கொண்டு ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த உஸ்மான் கவாஜா - கேமரூன் க்ரீன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தனர். அதன்பின் 71 ரன்களில் கவாஜாவும், 77 ரன்களில் கேம்ரூன் க்ரீனும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த அலெக்ஸ் கேரி 45, மிட்செல் ஸ்டார்க் 10 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்களைச் சேர்த்துள்ளது. அதன்பின் ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 26 ரன்களுடனும், நாதன் லையன் 8 ரன்களுடனும் இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
இதில் கம்மின்ஸ் மேற்கொண்டு ரன்கள் சேர்க்காமலும், ஸ்வெப்சன் ஒரு ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர். இதனால் 321 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை தரப்பில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியினர் ஆஸ்திரேலியாவின் ட்ராவிஸ் ஹெட், நாதன் லையன் ஆகியோரது பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் இலங்கை அணி 113 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அந்த அணியில் கேப்டன் கருணரத்னேவைத் தவிர வேறு எந்த வீரரும் 20 ரன்களைக் கடக்கவில்லை. ஆஸ்திரேலிய தரப்பில் ட்ராவிஸ் ஹெட், நாதன் லையன் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 5 ரன்கள் மட்டுமே இழக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் பவுண்டர், சிக்சரை விளாசி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.