SL vs ZIM, 3rd ODI: வநிந்து ஹசரங்கா அசத்தல் கம்பேக்; ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!

Updated: Thu, Jan 11 2024 22:37 IST
Image Source: Google

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதலாவது போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் இத்தொடரின் கடைசி ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. அதன்பின் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இப்போட்டி 27 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து இன்னிங்ஸைத் தொடர்ந்த ஜிம்பாப்வே அணியில் கைடானோ 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான கும்பியும் 29 ரன்களில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அதன்பின் களமிறங்கிய கேப்டன் கிரேக் எர்வின் ரன்கள் ஏதுமின்றியும், மில்டன் ஷும்பா 2 ரன்களுக்கும், சிக்கந்தர் ரஸா 10 ரன்களிலும், ரியான் பார்ல் 9 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 22.5 ஓவர்களிலேயே ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இலங்கை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய வநிந்து ஹசரங்கா 7  விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணிக்கு ஷெவோன் டேனியல் - அவிஷ்கா ஃபெர்னாண்டோ இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபெர்னாண்டோ ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, டேனியல் 12 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் குசால் மெண்டிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் களமிறங்கிய சதீரா சமரவிக்ரமா ஸ்டிரைக்கை ரெட்டேட் செய்யும் வேலைப் பார்த்துக்கொண்டார். 

மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த குசால் மெண்டிஸ் அரைசதம் கடந்ததுடன் 9 பவுண்டரி, ஒரு சிச்கர் என 66 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இலங்கை அணி 16.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த வநிந்து ஹசரங்கா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை