சையீத் முஷ்டாக் அலி: சாய் கிஷோர் ஹாட்ரிக்கில் தமிழ்நாடு அபார வெற்றி!
இந்தியாவின் உள்நாட்டு டி20 தொடரான சையீத் முஷ்டாக் அலி தொடர் கடந்த 4ஆம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. முதல் போட்டியில் மகாராஷ்டிராவை வீழ்த்தி வெற்றி பெற்ற தமிழ்நாடு அணி, 2ஆவது போட்டியில் ஒடிசாவுக்கு எதிராக ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இன்று லக்னோவில் தமிழ்நாடு அணி 3ஆவது போட்டியில் புதுச்சேரியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய புதுச்சேரி அணி முதலில் பேட்டிங் ஆடியது.
புதுச்சேரி அணியின் தொடக்க வீரர் சாகர் திரிவேதியை 2 ரன்னில் சந்தீப் வாரியர் வீழ்த்தினார். அதன்பின்னர் ரகுபதியும் தாமோதரன் ரோஹித்தும் இணைந்து 2ஆவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் ஆடி 41 ரன்களை சேர்த்தனர். ரகுபதியை 32 ரன்னில் சாய் கிஷோர் வீழ்த்தினார்.
ரகுபதியை தொடர்ந்து அடுத்த ஓவரிலேயே புதுச்சேரி கேப்டன் தாமோதரன் ரோஹித்தும் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். தோக்ரா ஒரு ரன்னில் நடையை கட்டினார். அதன்பின்னர் பவன் தேஷ்பாண்டே (25) மற்றும் ஃபபித் அகமது (27) ஆகிய இருவரும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து ஆடினர். அதன்பின்னர் பின்வரிசை வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களோடு விக்கெட்டை இழந்தனர்.
புதுச்சேரி இன்னிங்ஸின் கடைசி ஓவரை வீசிய சாய் கிஷோர், கடைசி ஓவரின் 2ஆவது பந்தில் ஃபபித் அகமதுவையும், 3ஆவது பந்தில் இக்லாஸ் நாகாவையும், 4ஆவது பந்தில் சுபோத் பாட்டியையும் வீழ்த்தி ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியனார். இதனால் 20 ஓவரில் புதுச்சேரி அணி 129 ரன்கள் மட்டுமே அடித்தது.
130 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர் ஜெகதீசன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர், ஹரி நிஷாந்த்துடன் ஜோடி சேர்ந்த பாபா அபரஜித் 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருமுனையில் 2 விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய ஹரி நிஷாந்த் அரைசதம் அடித்தார். அடித்து ஆடி சிக்ஸர்களாக விளாசிய ஹரி நிஷாந்த், 49 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 75 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்துவைத்தார்.
Also Read: T20 World Cup 2021
ஹரி நிஷாந்த்தின் அதிரடி அரைசதத்தால் 17வது ஓவரிலேயே இலக்கை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சையத் முஷ்டாக் அலி தொடரில் தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்று தமிழ்நாடு அணி அசத்தியுள்ளது.