சையித் முஷ்டாக் அலி: ருதுராஜ் சதம் வீண்; மஹாராஷ்டிராவை வீழ்த்தியது சர்வீஸ்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெற்றிருந்த ருத்துராஜ் கெய்க்வாட், நேற்று இரவு போட்டி விரைவில் முடிந்ததால், அன்று இரவே டெல்லியிலிருந்து பஞ்சாப்க்கு புறப்பட்டு சென்றார் . எந்த இடைவெளியும், ஓய்வும் இல்லாமல் மொஹாலி சென்ற ருத்துராஜ், சர்வீசஸ் அணிக்கு எதிரான சையித் முஷ்டாக் அலி கோப்பை லீக் ஆட்டத்தில் மஹாராஷ்டிரா விளையாடினார்.
இப்போட்டியில் டாஸ் வென்ற சர்வீஸ் அணி முதலில் பந்துவீசியது. இதனையடுத்து மகாராஷ்டிரா அணியின் கேப்டனான ருத்துராஜ் தொடக்க வீரராக களமிறங்கினார். ருத்துராஜை தவிர மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ரன் சேர்க்கவில்லை. யாஷ் நகர் 1 ரன்னில் ஆட்டமிழக்க, ராகுல் திரிபாதி 19 ரன்களில் வெளியேறினார்.
இதே போன்று நௌசாத் 24 ரன்களும், அசீம் காசி 13 ரன்களும் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் ருத்துராஜ் கெய்க்வாட் தனது வழக்கமான அதிரடியை காட்டினார். 2 நாட்களுக்கு முன்பு பேட்டிங்கில் சொதப்பி அணியிலிருந்து நீக்கப்பட்டவாரா, தற்போது இப்படி ஆடுகிறார் என்று காண்போரை வியப்பில் ஆழ்த்தியது ருத்துராஜ் இன்னிங்ஸ்.
இப்போட்டியொல் 59 பந்துகளில் சதம் விளாசிய ருத்துராஜ், கடைசி வரை 65 பந்துகளில் 112 ரன்கள் குவித்தார். இதில் 12 பவுண்டரிகளும், 5 இமாலய சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் 20 ஓவர் முடிவில் மஹாராஷ்டிரா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சர்வீஸ் அணியின் தொடக்க வீரர்கள் லகான் சிங், ரவி சௌகான், கேப்டன் ராஜத் பலிவால் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ராகுல் சிங் - அமித் பச்சாரா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க அணியின் வெற்றியும் உறுதியானது.
இதன்மூலம் சர்வீஸ் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் மஹாராஷ்டிரா அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இருப்பினும், ருத்துராஜ் கெய்க்வாட் கடைசி விளையாடிய 6 இன்னிங்சில் 108, 94,41,30, 19, 112 ரன்களை அடித்துள்ளார். இதில் 3 முறை அரைசதங்களை கடந்து 2 சதம் விளாசி இருக்கிறார். இப்படி உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் அசத்தும் ருத்துராஜ், ஏன் சர்வதேச போட்டியில் சொதப்புகிறார் என தெரியவில்லை. விரைவில் சர்வதேச போட்டியிலும் ருத்துராஜ் ஜொலித்தால் மட்டுமே அவரால் நிலைத்து நிற்க முடியும். இந்த குறையை அவர் எவ்வளவு சீக்கிரம் சரி செய்கிறாரோ, அது அவருக்கு நல்லது.