எனது முடிவுக்கு மற்றொருவருக்கு கிரெடிட் கிடைத்தது - அஜிங்கியா ரஹானே

Updated: Thu, Feb 10 2022 16:12 IST
Someone Else Took Credit For Decisions I Took In Australia: Ajinkya Rahane (Image Source: Google)

இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரர் அஜிங்கியா ரஹானே. டெஸ்ட் கிரிக்கெட்டில் 2013ஆஅம் ஆண்டிலிருந்து இந்திய அணிக்காக ஆடிவரும் அஜிங்க்யா ரஹானே, 82 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 12 சதங்கள் மற்றும் 25 அரைசதங்களுடன் 4931 ரன்களை குவித்துள்ளார். 

இந்தியாவை விட வெளிநாடுகளில் மிகச்சிறப்பாக விளையாடி நல்ல சராசரியை கொண்ட வீரர் அஜிங்கியா ரஹானே. ரஹானே நல்ல பேட்ஸ்மேன் மட்டுமல்லாது நல்ல கேப்டனும் கூட. 2020-2021 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடிவிட்டு அப்போதைய கேப்டன் விராட் கோலி இந்தியாவிற்கு திரும்பிவிட்டார். 

அந்த முதல் டெஸ்ட்டிலும் இந்திய அணி தோற்றுவிட்டது. அதற்கடுத்த 3 போட்டிகளிலும் இந்திய அணியை வழிநடத்திய அஜிங்கியா ரஹானே, அதில் 2 வெற்றிகளை பெற்று இந்திய அணிக்கு தொடரையும் வென்று கொடுத்தார்.

அந்த தொடரில் மெல்போர்னில் நடந்த 2ஆவது டெஸ்ட்டில் அபாரமாக விளையாடி சதமடித்த ரஹானே, ஆட்டநாயகன் விருதையும் வென்றார். அந்த தொடரை வென்று வரலாற்று சாதனையுடன் நாடு திரும்பிய ரஹானே, அதன்பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் படுமோசமாக விளையாடி வருகிறார். 

கடைசி 27 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 20.25 என்ற சராசரியுடன் வெறும் 547 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அவரது மோசமான ஃபார்ம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தொடர, இந்திய அணியில் அவரது இடம் குறித்து பேசப்பட்டுவருகிறது. ரஹானேவின் டெஸ்ட் கெரியர் முடிந்துவிட்டது என்று பேசப்படுகிறது. அவரை அணியிலிருந்து தூக்கிவிட்டு எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இளம் வீரர்களை சேர்க்க வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் உள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள அஜிங்க்யா ரஹானே, “என் கெரியர் முடிந்துவிட்டது என்று சிலர் பேசுவதை கண்டு நான் மௌனமாக சிரித்துவிட்டு நகர்ந்துவிடுவேன். ஆட்டத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள் அப்படி பேசமாட்டார்கள். ஆஸ்திரேலியாவில் என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவார்கள். அதற்கு முன்பும், டெஸ்ட் கிரிக்கெட்டில் என் பங்கு என்னவென்பது கிரிக்கெட்டை அறிந்தவர்களுக்கு தெரியும்.

நான் எப்படி ஆடியிருக்கிறேன் என்று எனக்கு தெரியும். யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.  அது எனது இயல்பும் கிடையாது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் களத்தில் நான் சுயமாக எடுத்த முடிவுகளுக்கான கிரெடிட் மற்றவர்களுக்கு கிடைத்தது. 

நான் தான் அதையெல்லாம் செய்தேன் என்று வெளிப்படையாக கூறும் நபர் அல்ல நான். எனக்கு அணியின் வெற்றியே முக்கியம். அந்த தொடரின் வெற்றி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி ” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை