சவுரவ் கங்குலியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை!
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கரோனாவால் பாதிக்கப்பட்டதையடுத்து கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஞாயிறன்று அவருக்கு லேசாகக் காய்ச்சல் அடித்தது. உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
அதில், கரோனா பாதிப்பு உறுதியானது. இந்த வருடம் ஏற்கெனவே இருமுறை இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுப்பதற்குப் பதிலாக மருத்துவமனைக்குச் செல்லவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தார்கள்.
இதனால் திங்கள் அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கங்குலி, கரோனா தடுப்பூசியை ஏற்கெனவே செலுத்திக்கொண்டுள்ளார். இந்நிலையில் கங்குலியின் உடல்நிலை குறித்து உட்லேண்ட்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளது. ஆக்ஸிஜன் அளவு சரியாக உள்ளது. நேற்றிரவு நன்குத் தூங்கினார். காலை, மதிய உணவுகளை உட்கொண்டார். மருத்துவர்கள் அவருடைய உடல்நிலையைத் தீவிரமாகக் கவனித்து வருகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
சவுரவ் கங்குலிக்கு கடந்த ஜனவரி 2ஆம் தேதி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, உட்லேண்ட்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு இதயத்தில் உள்ள 3 தமனிகளில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. அதில், ஒரு அடைப்பு ஸ்டென்ட் குழாய் பொருத்தப்பட்டு, அகற்றப்பட்டது.
ஐந்து நாள் சிகிச்சைக்குப் பிறகு, கங்குலி வீடு திரும்பினாா். அதே மாதத்தில் கங்குலிக்குக் மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரின் இதயத் தமனிகளில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்ய மேலும் 2 ஸ்டென்ட்கள் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.