கங்குலி தன்னை அணியில் சேர்த்தது குறித்து மனம் திறந்த ஹர்பஜன் சிங்!
கடந்த 2000ஆம் ஆண்டு சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தவித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற சௌரவ் கங்குலி, நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து தனது ஆக்ரோஷம் நிறைந்த அதிரடியான கேப்டன்ஷிப் முடிவுகளால் ஒருசில மாதங்களிலேயே வெற்றி நடை போட வைத்தார்.
வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், எம்எஸ் தோனி என அவர் வாய்ப்பளித்த அத்தனை வீரர்களும் நாளடைவில் ஜாம்பவான்களாக உருவாகும் அளவுக்கு தரமான வீரர்களை கண்டறிந்து வாய்ப்பளித்து இந்திய கிரிக்கெட்டின் வருங்காலத்தை சிறப்பாக கட்டமைத்த பெருமை அவருக்கு அதிகமாகவே சேரும்.
சொல்லப்போனால் அவர் உருவாக்கிய வீரர்கள்தான் எம்எஸ் தோனி தலைமையில் 2007, 2011 ஆகிய வருடங்களில் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்கள். அவரது தலைமையில் இந்தியா ஒரு உலக கோப்பை வெல்லவில்லை என்றாலும், வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில்தேவ் முகம்மது அசாருதீன் போன்றவர்களை காட்டிலும் நிறைய வெற்றிகளை குவித்தது.
மேலும் கங்குலி தலைமையில் இந்தியா பதிவு செய்த மிகச்சிறந்த வெற்றிகளில் கடந்த 2001இல் சொந்த மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை கூறலாம். அந்த சமயத்தில் ஸ்டீவ் வாக் தலைமையில் கிரிக்கெட்டின் அசுரனை போல செல்லும் இடமெல்லாம் எதிரணிகளை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து வெற்றிக்கொடியுடன் ராஜாங்கம் நடத்திய ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியாவை எதிர்கொண்டது.
அதில் மும்பையில் நடந்த முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 1 – 0 என ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் நடந்த 2ஆவது போட்டியிலும் 171 ரன்களுக்கு சுருண்ட இந்தியா பாலோ – ஆன் பெற்றதால் கதை முடிந்தது என்று நினைத்த வேளையில், 2ஆவது இன்னிங்சில் விஸ்வரூபம் எடுத்த விவிஎஸ் லக்ஷ்மன் – ராகுல் டிராவிட் ஜோடி அதே ஆஸ்திரேலியாவை கதற கதற அடித்து இறுதியில் 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தனர்.
அதன்பின் சென்னையில் நடைபெற்ற 3ஆவது போட்டியிலும் வென்ற இந்தியா 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்று வரலாற்றில் மிகச்சிறந்த வெற்றியைப் பதிவு செய்தது. அந்த தொடரில் முக்கிய வாய்ப்பு பெற்ற சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கொல்கத்தா போட்டியில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பந்துவீச்சாளராக சாதனை படைத்ததுடன் மொத்தம் 32 விக்கெட்டுகளை எடுத்து தொடர் நாயகன் விருதை வென்றார்.
அப்படி இந்தியாவை சிறப்பாக வழி நடத்திய போதிலும் அதிரடியான முடிவுகளை எடுக்கும் அவருக்கு அந்த சமயங்களில் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் அரசல் புரசலாக எதிர்ப்புகளும் இருந்தன. குறிப்பாக பயிற்சியாளர் கிரேக் சேப்பல் அவருக்குமிடையே ஏற்பட்ட சண்டையில் அவரின் கேப்டன் பதவி பறிபோகும் அளவுக்கு பிசிசிஐயில் எதிர்ப்புகள் எழுந்தன. அதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த தொடரில் தமக்கு வாய்ப்பளித்து அதில் தாம் சிறப்பாக செயல்பட தவறியிருந்தால் கங்குலின் கேப்டன்சிப் போயிருக்கும் என்று முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தற்போது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “அவர் கேப்டன் பதவியை இழக்க நேரிட்டிருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்த தொடரில் வெற்றி பெற முடியாமல் போயிருக்கும். ஒருவேளை அந்த தொடரில் நாங்கள் வெல்ல முடியாமல் போயிருந்தால் கங்குலி கேப்டனாக தொடர்ந்திருக்க முடியாது.
அவர் எனக்கு முழு ஆதரவு கொடுத்ததில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்காக எப்போதும் நன்றி உடையவனாக இருக்கிறேன். ஆனால் நீங்கள் சிறப்பாக செயல்பட்டால் தான் உங்களின் கேரியர் ஸ்பெஷலாக இருக்கும். கேப்டன் எப்போதும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தான் தருவார். அதை கங்குலி எனக்கு சரியான கடினமான தருணத்தில் கொடுத்தார்” என்று தெரிவித்தார்.