மகளிர் கிரிக்கெட்: டக்வெர்த் லூயீஸ் முறையில் தென்ஆப்பிரிக்கா வெற்றி!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (மார்ச் 12) லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ரன் ஏதுமின்றியும், ஸ்மிருதி மந்தானா 25 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த பூனம் ராவத், மிதாலி ராஜ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மெல்லமெல்ல உயர்த்தியது.
இதில் பூனம் ராவத் அரைசதம் கடந்தார். அதன்பின் 77 ரன்களில் பூனம் ராவத் வெளியேற, அவரைத்தொடர்ந்து மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி சர்மா ஆகியோர் தலா 36 ரன்களுடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 248 ரன்களை எடுத்தது.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தென்ஆப்பிரிக்க அணியிக்கு லிசெல் லீ அதிரடியான தொடக்கத்தை தந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் களமிறங்கிய லாரா வால்வார்ட், லாரா குட்டால் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இருப்பினும் அதிரடி ஆட்டத்தில் மிரட்டிவந்த லிசெல் லீ சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 3ஆவது சதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் கடைசி மூன்று ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி வெற்றிபெற 26 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டம் நடந்துகொண்டிருக்க, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து மழை நீடித்ததால், டக்வெர்த் லுயீஸ் முறைப்படி தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இப்போட்டில் சிறப்பாக விளையாடி சதமடித்த லிசெல் லீ ஆட்டநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டார்.