மகளிர் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொண்டது.
அதன்படி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு லாரா வோல்வார்ட் - டஸ்மின் பிரிட்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தார்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் 53 ரன்களில் லாரா வோல்வார்ட் ஆட்டமிழக்க, 68 ரன்களில் டஸ்மின் பிரிட்ஸும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் வந்த மரிசேன் கேப்பும் ஒருமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மரிசென் கேப் 27 ரன்களை எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இதையடுத்து இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு சோபியா டங்க்லி - டேனியல் வையட் இணை சிறப்பான தொடக்கத்தைக் அமைத்துக்கொடுத்தனர். இதில் டங்க்லி 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையிலிருந்த டேனியல் வையட் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து வந்த அலிஸ் கேப்ஸி ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த நாட் ஸ்கைவர் - கேப்டன் ஹீதர் நைட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்கைவர் 40 ரன்களில் ஆட்டமிழக்க, 31 ரன்களைச் சேர்த்திருந்த ஹீதர் நைட்டும் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளும் சோபிக்க தவறி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை மட்டும் சேர்க்க முடிந்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அயபொங்கா காகா 4 விக்கெட்டுகளையும், சப்னைம் இஸ்மைல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதுடன், மகளிர் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கும் முன்னேறி சாதனைப் படைத்துள்ளது.