மகளிர் ஒருநாள்: தொடரைக் கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா!

Updated: Mon, Mar 15 2021 11:06 IST
Image Source: Google

தென்ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் முன்னதாக நடைபெற்ற முன்று போட்டிகளில் தென்ஆப்பிரிக்க அணி இரண்டிலும், இந்திய அணி ஒன்றிலும் வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு பூனம் ராவத், மிதாலி ராஜ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 

இதில் மிதாலில் ராஜ் 45 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த பூனம் ராவத் சதமடித்து அசத்தினார். இதையடுத்து களமிறங்கிய ஹர்மன்பிரீத் கவுர் அரைசதமடித்து அணிக்கு உதவினார். இதன் மூலம் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் பூனம் ராவத் 104 ரன்களை குவித்தார். 


அதன்பின் வெற்றி இலக்கை துரத்திய தென்ஆப்பிரிக்க மகளிர் அணியின் தொடக்க வீராங்கனைகள் லாரா வால்வோர்ட், லிசெல் லீ இணை அதிரடியாக விளையாடி அணிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது. பின்னர் இருவரும் அரைசதம் கடந்த நிலையில், லிசெல் லீ 69 ரன்களிலும், லாரா 53 ரன்களிலும் ஆட்டமிழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த லாரா காட்டல், டு ப்ரீஸ் இணையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவியது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்க மகளிர் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, ஐந்து போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

மேலும் இப்போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் களமிறங்கிய முதல் நான்கு வீராங்கனைகளும் அரைசதம் கடந்து அணியின் வெற்றிக்கு உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை