SAvsPAK: பாகிஸ்தானை வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா அபார வெற்றி!

Updated: Mon, Apr 12 2021 22:32 IST
Image Source: Google

தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், நான்கு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இரு அணிகளிடையேயான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையேயான 20 ஓவர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகளை கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. 

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ஜோஹன்ஸ்பர்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

அதன்படி, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரிஸ்வான், சர்ஜூல் கான் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் பந்திலேயே ரிஸ்வான் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் களமிறங்கினார். ஆனால், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சர்ஜூல் கான் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜார்ஜ் லிண்டே ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்துவந்த ஹபீஸ் கேப்டன் பாபருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

அதன்பின் 23 பந்துகளில் 32 ரன்களைச் செர்த்த ஹபீஸ் 32 ஆட்டமிழந்தார். இப்போட்டியில்  நிலைத்து நின்று ஆடிய கேப்டன் பாபர் அசாம் அரைசதம் கடந்த கையோடு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். 

இதனால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் அதிகபட்சமாக ஜார்ஜ் லிண்டி, வில்லியம்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக மாலன், மார்க்ரம் களமிறங்கினர். இதில் மாலன் 2 சிக்சர்கள் உள்பட 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில்  ஹசன் அலி பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய லூபி 12 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஹஸ்னானின் பந்துவீச்சில் வெளியேறினார். 

அடுத்துவந்த கேப்டன் கிளாசன், மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 30 பந்துகளை சந்தித்த மார்க்கரம் 3 சிக்சர்கள் உள்பட 54 ரன்கள் எடுத்த நிலையில் உஸ்மான் ஹதீர் பந்துவீட்டில் ஆட்டமிழந்தார். இருப்பினும்14 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழந்த நிலையில் வெற்றி இலக்கான 141 ரன்களை தென் ஆப்பிரிக்கா எட்டியது.

இதன் மூலம் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது. தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் 21 பந்துகளில் 36 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. இரு அணிக்களுக்கும் இடையான 3ஆவது டி20 போட்டி வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை