மும்பை அணியின் தேர்வு குறித்து கேள்வி எழுப்பிய பிராட் ஹாக்!

Updated: Wed, Feb 16 2022 15:24 IST
Image Source: Google

இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 590 வீரர்கள் பங்கேற்ற ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 2 நாட்கள் பெங்களூருவில் சுமார் 19 மணி நேரங்கள் நடந்த இந்த ஏலத்தில் 204 வீரர்கள் மட்டும் 551 கோடி ரூபாய் செலவில் வாங்கப் பட்டுள்ளார்கள். இந்த ஏலத்தின் வாயிலாக சென்னை, மும்பை போன்ற அணிகள் தங்களுக்கு தேவையான 25 வீரர்களையும் வாங்கி தங்கள் அணியை முழுமைப்படுத்தி உள்ளன.

ஆனால் குஜராத் போன்ற ஒரு சில அணிகள் 90 கோடி ரூபாய்களை செலவழித்து போதிலும் தவறான அணுகுமுறைகள் காரணமாக 25 வீரர்களை முழுமையாக வாங்க முடியவில்லை. இதன்காரணமாக இருக்கும் வீரர்களை வைத்து அவர்கள் சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இருப்பினும் தற்போது 10 அணிகளும் தங்களது அணியில் உள்ள வீரர்களின் பட்டியலை உறுதி செய்துள்ளனர்.

இந்த மெகா ஏலத்தில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஒரு சில முக்கிய வீரர்களை சற்றும் யோசிக்காமல் பல கோடி ரூபாய்களை வாரி இறைத்து வாங்கியுள்ளது. குறிப்பாக இந்த ஏலம் துவங்கிய முதல் நாளில் முதல் வீரராக இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிசானை 15.25 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு அந்த அணி நிர்வாகம் கொஞ்சம் கூட யோசிக்காமல் வாங்கியது.

இதன் வாயிலாக இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் என்ற பெருமையை இஷான் கிசான் பெற்றுள்ளார். மேலும் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் டிம் டேவிட் 8.25 கோடிகள் என்ற பெரிய தொகைக்கு மும்பை அணிக்காக ஒப்பந்தம் ஆனார்.

அத்துடன் டைமல் மில்ஸ், ரிலே மெரிடித் போன்ற வெளிநாட்டு வீரர்களையும் பெரிய தொகையில் ஒப்பந்தம் செய்து அந்த அணி நிர்வாகம் இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை 8 கோடி கொடுத்து வாங்கியது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏனெனில் காயம் காரணமாக அவர் ஐபிஎல் 2022 தொடரில் பங்கேற்பது சந்தேகம் என தெரிந்தும் அவரை வாங்கியுள்ள மும்பையின் இந்த முடிவை பற்றி ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் விமர்சனம் செய்துள்ளார்.

இது பற்றி பேசிய அவர்,“இஷான் கிஷனுக்கு 15 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகையை செலவு செய்த பின் ஜோப்ரா ஆர்ச்சர் மீது 8 கோடிகளை கொட்டியது மிகப் பெரிய ஆபத்தாகும். அவர் கடந்த 18 மாதங்களில் 2 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். அது ஒரு வேகப்பந்து வீச்சாளரின் வாழ்நாளில் ஏற்படும் மிகக்பெரிய காயமாகும். அத்துடன் ரோஹித், இஷான் கிசான், சூரியகுமார் யாதவ் மற்றும் டிம் டேவிட் ஆகிய 4 வீரர்கள் டாப் ஆர்டரில் பலமாக இருப்பதும் அந்த அணிக்கு ஆபத்தை விளைவிக்கும். ஏனெனில் 5வது இடத்தில் மிடில் ஆர்டரில் யார் விளையாடுவார்.

மும்பை அணியை பொறுத்தவரை அவர்களின் பந்துவீச்சு துறையில்தான் தலைவலி ஏற்படும் என நினைக்கிறேன். ஏனெனில் அவர்களின் பந்துவீச்சு கூட்டணியில் நல்ல ஆழம் கிடையாது. அதேசமயம் அவர்களிடம் தரமான சுழல் பந்து வீச்சாளர்களும் இல்லை. அத்துடன் தற்போது அவர்களிடம் போட்டியை வெற்றிகரமாக பினிஷிங் செய்யக்கூடிய பாண்டியா சகோதரர்களும் இல்லை. எனவே ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் சந்தித்த மிகவும் மோசமான ஏலம் இதுவாகும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை