ஐசிசியின் முடிவு குறித்து பிராட் ஹாக் அதிருப்தி!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கவும், ரசிகர்களை மைதானத்திற்குள் அழைத்து வரவும் ஐசிசி பல்வேறு முயற்சிகளை செய்தது. டே நைட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை அறிமுகப்படுத்தியது. ஆடுகளங்களை போட்டியின் முடிவு தெரியுமாறு அமைப்பதற்கு கிரிக்கெட் வாரியங்களை வலியுறுத்தியது. மிக முக்கியமாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என உலகக்கோப்பை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தி வருகிறது.
முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கான இறுதிப் போட்டிக்கு இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் தகுதி பெற்றன. இங்கிலாந்தில் வைத்து நடத்தப்பட்ட இந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்றியது.
இதற்கடுத்து இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஓட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியும் தகுதி பெற்றன. இந்தியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 2-1 எனத் தொடரை கைப்பற்றவும், அதே சமயத்தில் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பில் இருந்த இலங்கை அணி நியூசிலாந்து அணி உடனான டெஸ்ட் போட்டியில் தோல்வி அடையவும், இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதுவதற்கு தகுதி பெற்றது.
இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7ஆம் தேதி நடக்க இருக்கிறது. அதாவது ஏறக்குறைய மூன்று மாதங்கள் கழித்து இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது.தற்பொழுது இது குறித்து மிகப் பெரிய தனது அதிருப்தியை ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிராட் ஹாக் கூறியுள்ளார.
இதுகுறித்து பேசிய அவர், “ஐசிசி என்ன செய்து கொண்டிருக்கிறது? முக்கிய போட்டிகள் எல்லாம் முடிந்து விட்டன. ஆனால் நாங்கள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடுவதற்காக மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டுமா? இது ரசிகர்களுக்கு நல்லதல்ல. ஐசிசி தயவுசெய்து இந்த விசயத்தில் விழியுங்கள்.
மூன்று மாதங்கள் கழித்து போட்டி நடக்கும் பொழுது அனைத்து வேகமும் அதற்குள் இருந்த உற்சாகமும் கலைந்திருக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரும் வேளையில், எல்லோருக்கும் தேவையான கிரிக்கெட் கிடைத்திருக்கும். அவர்கள் அந்த இறுதிப் போட்டியில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.