IND vs SA, 3rd T20I: ஸ்பின்னர்களை பாராட்டிய ரிஷப் பந்த்!

Updated: Wed, Jun 15 2022 11:55 IST
Image Source: Google

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார். 

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் 57 ரன்களையும், இஷான் கிஷன் 54 ரன்களும் குவித்தனர்.

அதை தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சாஹல் 3 விக்கெட்டுகளையும், ஹர்ஷல் பட்டேல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்.

ஏற்கனவே இந்த தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைந்திருந்த இந்திய அணியானது இந்த மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தற்போது இந்த ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-1 என்று பின்தங்கி இருந்தாலும் இறுதியாக வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கும் விசயமாக மாறியுள்ளது.

இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய கேப்டன் ரிஷப் பந்த், “இந்த போட்டியில் தான் எங்களது பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் என அனைவருமே சிறப்பாக செயல்பட்டனர். நாங்கள் இந்த போட்டியில் 15 ரன்கள் வரை குறைவாகவே எடுத்துவிட்டோம். ஆனாலும் அதைப்பற்றி பெரிய அளவில் யோசிக்கவில்லை.

இந்த போட்டியில் நமது அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஸ்பின்னர்களுக்கான ரோல் என்ன என்பது நம் அனைவருக்குமே தெரிந்ததுதான். அந்த வகையில் நிறைய அழுத்தங்கள் இருந்தாலும் ஸ்பின்னர்கள் சிறப்பாக பந்துவீசி இருந்தனர்.

இந்த போட்டியின் போது பேட்டிங்கில் எங்களுக்கு நல்ல துவக்கம் கிடைத்திருந்தாலும் இடையில் சில விக்கட்டுகளை தவற விட்டதால் இன்னும் பெரிய ரன் குவிப்பிற்கு செல்ல முடியவில்லை. இனி வரும் போட்டிகளில் அதையும் திருத்திக்கொண்டு மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற முயற்சிப்போம்” தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை