கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் ஸ்ரீசாந்த்!

Updated: Thu, Mar 10 2022 10:24 IST
Image Source: Google

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் (வயது 39). கேரளாவில் பிறந்த இவர், 2006இல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். தோனியின் தலைமையில் 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற அணியிலும் ஸ்ரீசாந்த் இடம்பெற்றிருந்தார்.

இதுவரை 27 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 53 ஒருநாள் போட்டிகளில் 75 விக்கெட்டும், 10 டி20 போட்டிகளில் 7 விக்கெட்டும் கைப்பற்றியிருக்கிறார். 

சூதாட்ட குற்றச்சாடுகளால் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய தடை ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு முதல் தர  கிரிக்கெட்டுக்கு திரும்பிய ஸ்ரீசாந்த், அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ட்விட்டரில் தனது ஓய்வு முடிவை அறிவித்த ஸ்ரீசாந்த், இந்தியாவுக்காக விளையாடி எனது குடும்பம், எனது அணியினர் மற்றும் இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியதை எனக்கு கிடைத்த கவுரவமாக நினைக்கிறேன், என கூறி உள்ளார்.

அதில் அவர்,“மிகுந்த வருத்தத்துடன் கனத்த இதயத்துடன் இதைச் சொல்கிறேன். இந்திய உள்நாட்டு (முதல் வகுப்பு மற்றும் அனைத்து வகை போட்டிகள்) கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன். அடுத்த தலைமுறை வீரர்களுக்காக, எனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்தேன். இந்த முடிவு எனக்கு மகிழ்ச்சியைத் தராது என்றாலும், இந்த நேரத்தில் இந்த முடிவை எடுப்பது சரியான மற்றும் மரியாதைக்குரிய செயலாகும். கிரிக்கெட்டின் ஒவ்வொரு தருணத்தையும் நான் நேசித்தேன்” என ஸ்ரீசாந்த் கூறி உள்ளார். 

இந்த ஆண்டு ரஞ்சி கோப்பை போட்டியில் ஸ்ரீசாந்த் விளையாடினார். மேகாலயாவுக்கு எதிராக கடந்த மாதம் நடந்த போட்டியில் கேரள அணிக்காக விளையாடிய ஸ்ரீசாந்த், அந்த போட்டியில் 2 விக்கெட் வீழ்த்தினார். அதுவே அவருக்கு கடைசி போட்டியாக அமைந்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை