ஆசியக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!
ஆசிய கிரிக்கெட் கவுன்சில், ஆசியக் கோப்பைப் போட்டியை 1984 முதல் நடத்தி வருகிறது. 50 ஓவர், டி20 என இரு வகைகளிலும் இப்போட்டி நடைபெறும். இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது.
2022 ஆசியக் கோப்பைப் போட்டி இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 போட்டி நடைபெறுகிறது.
அதன்படி ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறவுள்ள போட்டியில் ஆகஸ்ட் 28 அன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான், தகுதிச்சுற்று அணி என மூன்று அணிகள் குரூப் ஏ பிரிவிலும் இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.
இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதவுள்ளன. சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், செப்டம்பர் 11 அன்று துபாயில் நடைபெறும் இறுதிச்சுற்றில் மோதுகின்றன. ஷார்ஜா, துபாயில் நடைபெறும் அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரம் இரவு 7.30 மணிக்குத் தொடங்குகின்றன.
இந்நிலையில் ஆசியக் கோப்பை டி20 போட்டிக்கான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 பேர் கொண்ட அணியை தசுன் ஷனகா வழிநடத்துகிறார்.
இலங்கை அணி: தசுன் ஷனகா (கேப்டன்), தனுஷ்கா குணதிலகா, பதும் நிஷங்கா, குசால் மெண்டிஸ், சரித் அசலங்கா, பனுகா ராஜபக்ஷா, ஆஷன் பண்டாரா, தனஞ்ஜெயா டி சில்வா, வநிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, ஜெஃப்ரி வாண்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரமா, துஷ்மந்தா சமீரா, பினுரா ஃபெர்னாண்டோ, சமிகா கருணாரத்னே, தில்ஷன் மதுஷங்கா, மதீஷா பதிரனா, தினேஷ் சண்டிமல், நுவநிந்து ஃபெர்னாண்டோ, கசுன் ரஜிதா.