IND vs SL, 2nd T20I: அக்ஸர், மாவி அதிரடி வீண்; இந்தியாவை வீழ்த்தியது இலங்கை!
இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலனா இரண்டாவது டி20 போட்டி புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் தொடக்க வீரர் குஷால் மென்டிஸ் 52 ரன்கள் சேர்த்தார். பதும் நிசங்கா 33 ரன்கள், சரித் அசலங்கா 37 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய கேப்டன் தசுன் சனகா, 22 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் 56 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களைச் சேர்த்தது. இந்தியா தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குறிப்பாக 16வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்சர் பட்டேல் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் தொடக்க வீரர்கள் இஷான் கிசன் 2 ரன், ஷுப்மன் கில் 5 ரன், அறிமுக வீரர் ராகுல் திரிபாதி 5 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் தொடக்கத்தில் அதிரடி காட்டினாலும், 12 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, கடந்த போட்டியில் அபாரமாக செயல்பட்ட தீபக் ஹூடா இப்போட்டியில் 9 ரன்களுக்கும் தனது விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - அக்ஸர் படேல் இணை ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி விக்கெட்டை இழப்பை தடுத்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடி ஆட்டத்தை கையிலெடுத்த அக்ஸர் படேல், ஹசரங்காவின் ஓவரில் அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளாசி எதிரணிக்கு அச்சத்தை ஏற்படுத்தினார். அதே ஓவரில் சூர்யகுமார் யாதவும் ஒரு சிக்சரை விளாச அந்த ஓவரில் 26 ரன்கள் கிடைத்தது.
அதன்பின் அபாரமாக விளையாடிய அக்ஸர் படேல் 20 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 அரைசதத்தைப் பதிவுசெய்தார். அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் தனது அரைசதத்தைக் கடக்க இந்திய அணியின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமானது. ஆனால் 51 ரன்களை எடுத்திருந்த சூர்யகுமார் யாதவ் பெரிய ஷாட் அடிக்க முயன்று விக்கெட்டை இழந்தார்.
அத்துடன் இந்திய அணியின் வெற்றியும் பறிபோனது என கருதப்பட்ட நிலையில், களமிறங்கிய ஷிவம் மாவி யாரும் எதிர்பார்க்காத வகையில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி, சிக்சர் என விளாசி அணியின் வெற்றிவாய்ப்பை தக்கவைத்தார். இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணி வெற்றிக்கு 33 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
இறுதியில் 31 பந்துகளில் 6 சிக்சர், 3 பவுண்டரிகள் என 63 ரன்களைச் சேர்த்திருந்த அக்ஸர் படேல் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் இந்திய அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை மட்டுமே எடுக்க மிடிந்தது.
இதன்மூலம் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 1-1 என்ற கணக்கில் டி20 தொடரை சமன் செய்துள்ளது.