SL vs PAK, 2nd Test: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை சமன்செய்தது இலங்கை!

Updated: Thu, Jul 28 2022 17:18 IST
Sri Lanka Defeat Pakistan By 246 Runs In 2nd Test; Series Ends In A Draw (Image Source: Google)

பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை முதல் இன்னிங்சில் 378 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 2-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து இருந்தது. 

அதன்பின் 3ஆவது நாளில் தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 88.1 ஓவர்களில் 231 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரமேஷ் மென்டிஸ் 5 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 147 ரன்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி நேற்றைய முடிவில் 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் திமுத் கருணாரத்னே 27 ரன்னுடனும், தனஞ்செயா டி சில்வா 30 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 4ஆவது நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டி செல்வா சதம் அடித்து அசத்தினார்.

கருணாரத்னே அரை சதம் எடுத்து அவுட் ஆனார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை அணி 8 விக்கெட்டை இழந்து 360 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 508 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

4ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 89 ரன்கள் எடுத்திருந்த போது, மழை மேகம் திரண்டு போதிய வெளிச்சம் இல்லாத சூழல் உருவாகியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மோசமான வானிலை நிலவியதால் அத்துடன் 4ஆவது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. 

இதன் காரணமாக 26 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது. இமாம் உல்-ஹக் 46 ரன்களுடனும், கேப்டன் பாபர் அசாம் 26 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தார். இந்நிலையில் 5ஆவது நாளான இன்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 97 ரன்னில் 2ஆவது விக்கெட்டை பறிகொடுத்தது. இமாம் உல்-ஹக் 49 ரன்னில் அவுட் ஆனார். 

அடுத்து வந்த ரிஷ்வான் - பாபர் அசாமுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினார். 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிஷ்வான் வெளியேறினார். அடுத்த வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

ஃபவாத் ஆலம் 1, சல்மான் 4, பாபர் அசாம் 81, முகமது நவாஷ் 12, யாசிர் ஷா 27, ஹசன் அலி 11, நசீம் ஷா 18 என வெளியேற பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இலங்கை அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணி தரப்பில் ஜெயசூர்யா 5 விக்கெட்டும், ரமேஷ் மெண்டீஸ் 4 விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக டி செல்வா தேர்வு செய்யப்பட்டார். தொடர்நாயகனாக ஜெயசூர்யா தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை