உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளியது இலங்கை!

Updated: Wed, Apr 03 2024 20:07 IST
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளியது இலங்கை! (Image Source: Google)

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி சட்டோகிராமில் மார்ச் 30ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 531 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. 

அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 353 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இலங்கை அணி சற்று தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதுடன் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை எடுத்த நிலையில் இன்னிங்ஸை டிக்ளர் செய்வதாக அறிவித்தது. 

இதனால் வங்கதேச அணி 510 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை துரத்திய வங்கதேச அணியில் மெஹிதி ஹசன், மொமினுல் ஹக் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 318 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 192 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதன் மூலம் இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி நான்காம் இடத்திற்கு முன்னெறி அசத்தியுள்ளது. அதன்படி இப்பட்டியலில் இந்திய அணி 68.51 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தையும், ஆஸ்திரேலிய அணி 62.50 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், நியூசிலாந்து அணி 50 சதவீத புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர்.

இதில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி வெற்றிபெற்றதன் மூலம் 50 சதவீத புள்ளிகளுடன் நான்காம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இதில் பாகிஸ்தான் அணி 36.66 புள்ளிகளுடன் பாகிஸ்தான் ஐந்தாம் இடத்திற்கும், 33.33 புள்ளிகளுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 6ஆம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை