விளையாட்டுத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்த இலங்கை அதிபர்!

Updated: Mon, Nov 27 2023 23:13 IST
Image Source: Google

ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலக கோப்பை 2023 தொடரில் பங்கேற்ற இலங்கை அணி, தொடர் தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் தொடரிலிருந்து வெளியேறியது. குறிப்பாக இந்தியாவுடன் நடந்த போட்டியில் 55 ரன்கள் மற்றுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

மோசமான ஆட்டத்தை இலங்கை அணியினர் வெளிப்படுத்தியதால் இலங்கை அணியின் கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டது. இந்த முடிவை அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க அறிவித்தார்.

இதனால் இலங்கை கிரிக்கெட் அணியில் அரசியல் தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இலங்கை அணியை இடைநீக்கம் செய்து ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்தது. மேலும் அடுத்தாண்டு இலங்கையில் நடைபெற இருந்த ஆடவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது.

இந்நிலையில் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரனசிங்கேவை பதவிநீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் ரனில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். இலங்கையின் கிரிக்கெட் புகழை மீட்டெடுக்க விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரோஷன் ரணசிங்க 7 பேர் கொண்ட வல்லுனர் குழுவை அமைத்திருந்தார். 

அதில் 1996 இல் இலங்கை அணி உலக சாம்பியன் பட்டம் வென்றபோது கேப்டனாக இருந்த அர்ஜுனா ரணதுங்கா, உச்ச நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தார்கள். முக்கிய ஆட்டங்களில் படுதோல்வி, கிரிக்கெட் வாரியத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம், ஐசிசி நடவடிக்கை போன்றவைகளால் விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கா மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. 

அவரது பதவியை பறிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி வந்தனர். இந்நிலையில் ரோஷனை இன்று பொறுப்பிலிருந்து நீக்கி அதிபர் ரனில் விக்ரமசிங்கே நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நிகழ்வு இலங்கை மற்றும் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை