பயோ பபுளை விட்டு வெளியேறிய இலங்கை வீரர்களுக்கு தடை!

Updated: Mon, Jun 28 2021 20:00 IST
Sri Lanka Recalls Three Players Over Covid Bubble Breach (Image Source: Google)

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி, இங்கிலாந்து அணியிடம் தொடரை இழந்தது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இலங்கை அணி ஏற்கெனவே டி20 தொடரை இழந்துள்ளதால், ஒருநாள் தொடரையாவது வெல்லுமா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதற்கிடையில் இலங்கை வீரர்களான நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகிய மூவரும் பயோ பபுள் பாதுகாப்பு சூழலை விட்டு வெளியேறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் டர்ஹம் சிட்டி செண்டர் என்கிற பொது இடத்தில் மெண்டிஸும், டிக்வெல்லாவும் இருந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியானது. 

இருவர் கைகளிலும் முகக்கவசம் இருந்தாலும் இருவரும் அதை அணிந்திருக்கவில்லை. சிட்டி செண்டர் பகுதியில் காரில் சென்ற ஒருவர் அவர்களுக்குத் தெரியாமல் விடியோ எடுத்துள்ளார். இவர்களுடன் வெளியேறிய தனுஷ்கா குணதிலக ஆக்கணொளியில் இடம்பெறவில்லை.

இந்த காணொளி வெளியான பிறகு மூன்று வீரர்களும் பயோ பபுள் சூழலை விட்டு வெளியேறியது பற்றி விசாரணை நடைபெற்றது. இதில் மூவரும் பயோ பபுள் சூழலை விட்டு வெளியே சென்றதை ஒப்புக்கொண்டார்கள். இதையடுத்து மூவருக்கும் இடைக்காலத் தடை விதித்து இங்கிலாந்திலிருந்து வெளியேற்றியுள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம். மூவரும் விமானத்தில் இலங்கைக்குத் திரும்பியுள்ளார்கள்.

டி20 தொடரில் மூவரும் சுமாராக விளையாடினாலும் ஒருநாள் தொடரில் இலங்கை அணியின் முதல் தேர்வாக இருக்கக்கூடியவர்கள். அவிஷ்கா ஃபேர்னாண்டோவும் காயத்தால் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளதால் ஒருநாள் தொடரில் சரியான வீரர்களைத் தேர்வு இலங்கை அணி தடுமாறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.    

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை