IND vs SL: வரலாற்றை மாற்றி சரித்திரம் படைப்போம் - திமுத் கருணரத்னே!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மார்ச் 4ஆம் தேதி மொஹாலியில் தொடங்கவுள்ளது. டி20 தொடரை இந்திய அணி ஏற்கனவே 3 - 0 என வைட் வாஷ் செய்த நிலையில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்ற முணைப்பு காட்டுகிறது.
இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்புகளும் மிக அதிகமாக உள்ளது. ஏனென்றால் இந்திய மண்ணில் இந்தியாவை இதுவரை ஒரு டெஸ்டில் கூட இலங்கை வீழ்த்தியதே கிடையாது. இதுவரை நடைபெற்றுள்ள 20 போட்டிகளில் இந்திய அணி 11 முறை வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 9 போட்டிகள் சமனில் முடிவடைந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, கடந்த 7 வருடங்களில் அயல்நாட்டில் கூட இந்தியாவை இலங்கை வீழ்த்தவில்லை. கடைசியாக 2015ஆம் ஆண்டு கல்லேவில் நடந்த டெஸ்டில் தோற்கடித்தது. இதுவரை மொத்தமாக இரு அணிகளும் 44 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 20 முறையும், இலங்கை 7 முறையும் வெற்றி கண்டுள்ளன. 17 போட்டிகள் சமனிலேயே முடிந்தது.
இந்நிலையில் இலங்கை அணி கேப்டன் திமுத் கருணரத்னே இந்திய அணிக்கு சவால் விடும் வகையில் பேசியுள்ளார். அதில், “இந்தியாவுக்கு டெஸ்ட் தொடரை வெல்வ வேண்டும் என்ற நோக்கத்தில் தான் வந்தோம். இலங்கை ஒரு முறை கூட இந்தியாவில் டெஸ்ட் போட்டியை வென்றதில்லை. ஆனால் இந்த முறை சரித்திரத்தை மாற்றி அமைப்போம்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அடுத்தடுத்து 2 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளோம். அந்த வெற்றிப்பாதையில் தொடர்ந்து செல்வோம். இந்திய அணியை எதிர்ப்பது சவாலான ஒன்று தான். ஆனால் எங்களிடம் இந்திய அணியை வீழ்த்தக்கூடிய சிறந்த வீரர்கள் உள்ளனர். எனவே கண்டிப்பாக வீழ்த்துவோம்” என கருணரத்னே கூறியுள்ளார்.