நடுவானில் எரிபொருள் காலி; இந்தியாவில் தரையிறங்கிய இலங்கை வீரர்கள்!
நடுவானில் எரிபொருள் காலி; இந்தியாவில் தரையிறங்கிய இலங்கை வீரர்கள்!இளம் வீரர்களை கொண்ட ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்த தொடருக்காக இந்திய அணி கடந்த 2ஆம் தேதியே இலங்கை சென்றுவிட்ட நிலையில், இலங்கை வீரர்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வந்தனர். கடந்த 4ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தொடரில் தோல்வியை சந்தித்த இலங்கை அணி நேற்றைய தினம் இலங்கை திரும்பினர்.
இந்நிலையில் அவர்கள் இங்கிலாந்தில் இருந்து நேரடியாக இந்தியாவுக்கு சென்றுவிட்டு, அதன் பின்னர் தான் தாய் நாட்டிற்கு திரும்பினார்கள் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியானது. இந்திய அணி வீரர்கள் இலங்கையில் இருக்கும் போது, அவர்கள் ஏன் இந்தியாவுக்கு சென்றனர். போட்டிகள் எங்கு நடக்கிறது என்பது கூட மறந்துவிட்டார்களா என ரசிகர்கள் காரணம் தெரியாமல் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறுகையில், “நாங்கள் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய போது இந்தியாவுக்கு திசைதிருப்பப்பட்டோம். விமானத்தில் எரிப்பொருள் குறைவாக இருந்த காரணத்தினால் விமானி இந்தியாவில் தரையிறக்கினார். அங்கு எரிப்பொருள் நிரப்பப்பட்டு பின்னர் புறப்பட்டோம்” என தெரிவித்தார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி வரும் ஜூலை 13ஆம் தேதி தொடங்குகிறது. இதற்காக இலங்கை வீரர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவர்களுக்கு வரும் முடிவுகளை பொறுத்துதான் போட்டிகள் நடக்குமா என்பது குறித்து தெரியும்.