தினேஷ் கார்த்திக் ஃபினிஷர் கிடையாது - ஸ்ரீகாந்த் சாடல்!
ஐபிஎல் 15ஆவது சீசனில் அபாரமாக விளையாடி, ஆர்சிபி அணிக்கு டெத் ஓவர்களில் அதிரடியாக விளையாடி பல போட்டிகளை முடித்து கொடுத்தார் தினேஷ் கார்த்திக். அதன் விளைவாக இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்தார்.
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர்களிலும் டெத் ஓவர்களில் அதிரடியாக ஆடி கடைசி 4-5 ஓவர்களில் அணிக்கு நிறைய ரன்களை சேர்த்து கொடுத்துவருகிறார். டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், இந்திய அணியில் தனக்கான இடத்தை நிரந்தரமாக்கிவிட்டார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கூட, டெத் ஓவர்களில் அதிரடியாக விளையாடி 19 பந்தில் 41 ரன்களை விளாசி 20 ஓவரில் இந்திய அணி 190 ரன்களை குவிக்க உதவினார். ஆனால் அதற்கடுத்த 2 போட்டிகளிலும் அவர் பெரிதாக ஆடவில்லை.
தினேஷ் கார்த்திக்கை ஒரு ஃபினிஷராக இந்திய அணி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், தினேஷ் கார்த்திக் ஃபினிஷர் கிடையாது என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள ஸ்ரீகாந்த், “தினேஷ் கார்த்திக்கை ஃபினிஷர் என்று சொல்வது தவறு. ஃபினிஷருக்கான வரையறையே தவறாக புரிந்துகொண்டுள்ளனர். ஐபிஎல் மற்றும் இந்தியாவிற்காக சில போட்டிகளில் டெத் ஓவர்களில் தினேஷ் கார்த்திக் நன்றாக ஆடியிருக்கிறார். ஃபைனல் டச் நன்றாக கொடுக்கிறாரே தவிர, அவர் ஃபினிஷர் கிடையாது.
ஃபினிஷர் என்பவர் கடைசி 4-5 ஓவர்களில் அடித்து ஆடுபவர் கிடையாது. 8-9 ஓவர்களிலிருந்து ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச்சென்று வெற்றிகரமாக முடித்து கொடுப்பவரே ஃபினிஷர். சூர்யகுமார் யாதவை எடுத்துக்கொள்ளுங்கள். இங்கிலாந்துக்கு எதிராக கடைசி வரை தனி ஒருவனாக ஆட்டத்தை எடுத்துச்சென்றார்.
ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த் ஆகியோர் ஃபினிஷர்கள். ரோஹித் சர்மா ஓபனிங்கில் இறங்கி கடைசிவரை ஆடுவார். அதுவும் டெத் ஓவர்களில் 12வது கியரில் ஆடுவார். அவரும் ஃபினிஷரே. ஆனால் தினேஷ் கார்த்திக் ஃபினிஷர் கிடையாது” என்று கூறியுள்ளார்.