டி20 கிரிக்கெட்டில் தோனி எட்டிய மற்றொரு மைல் கல்!
மகேந்திர சிங் தோனி 20ஆவது ஓவர்களில் மட்டும் இதுவரை 121 பந்துகளை எதிர்கொண்டு 323 ரன்களை விளாசியுள்ளார். இதில் 26 பவுண்டரிகளும், 26 சிக்சர்களும் அடங்கும். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 266.94 ஆகும். இப்படி ஒரு சாதனையை அதிரடி பேட்ஸ்மேன்களான டிவில்லியர்ஸ், கெயில் கூட படைத்தது இல்லை.
தோனியின் நேற்றைய ஆட்டத்தை பார்க்கும்போது 2010ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிதான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வந்தது. பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வென்றால்தான் அரையிறுதி வாய்ப்பு என்ற நிலை சென்னை அணிக்கு ஏற்பட்டது. அப்போது கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. இர்ஃபான் பதான் வீசிய ஓவரில் 4,2,6,6 என விளாசி த்ரில் வெற்றியை பெற்று தந்தார் தோனி.
அப்போது அவருக்கு வயது 28. சரியாக 12 ஆண்டுகள் கழித்தும் அதேபோன்ற ஒரு ஆட்டத்தை மும்பைக்கு எதிராக போட்டியில் பார்க்க முடிந்தது. வயது ஆனாலும் அதே வேகம், துடிப்பு, ஃபினிஷிங் ஸ்டைலும் இன்றும் நீடிக்கிறது என்றால், அது கிரிக்கெட்டின் மீது தோனி கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை வெளிக்காட்டுகிறது.