தி ஹண்ரட்: பால் ஸ்டிர்லிங் அதிரடியில் பட்டத்தை வென்றது சதர்ன் பிரேவ்!
இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்பட்ட தி ஹண்ரட் எனப்படும் 100 பந்துகள் கிரிக்கெட் போட்டி, விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பர்மிங்ஹாம் பினீக்ஸ் - சதர்ன் பிரேவ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய சதர்ன் பிரேவ் அணிக்கு தொடக்க வீரர் பால் ஸ்டிர்லிங் அபாரமாக விளையாடி அரைசதமடித்தார்.
அவரைத் தொடர்ந்து இறுதியில் ரோஸ் வைட்லியும் தனது பங்கிற்கு 44 ரன்களை குவித்து அசத்தினார். இதன் மூலம் 100 பந்துகள் முடிவில் சதர்ன் பிரேவ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணி தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் மொயீன் அலி - லியாம் லிவிங்ஸ்டோன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
பின் 46 ரன்களில் லிவிங்ஸ்டோன் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 36 ரன்களில் மொயீன் அலியும் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த வீரர்களும் சரிவர சோபிக்காததால், 100 பந்துகள் முடிவில் அந்த 136 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் சதர்ன் பிரேவ் அணி 32 ரன்காள் வித்தியாசத்தில் பர்மிங்ஹாம் பீனிக்ஸ் அணியை வீழ்த்தி, அறிமுக சீசன் தி ஹண்ரட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. மேலும் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பால் ஸ்டிர்லிங் ஆட்டநாயகனாகவும், லியாம் லிவிங்ஸ்டோன் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.