புவனேஷ்வர் குமாரின் நேரம் முடிந்து விட்டது - சுனில் கவாஸ்கர் அதிருப்தி!

Updated: Sat, Jan 22 2022 19:46 IST
Sunil Gavaskar wants THIS pacer to replace Bhuvneshwar Kumar in India core team (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கு பெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை நடந்த 2 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2 – 0* என தொடரில் பின்தங்கியதுடன் தொடரை வெல்லும் வாய்ப்பை இழந்தது. 

ஏற்கனவே நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பல தரமான வீரர்களை வைத்திருந்த போதிலும் பரிதாப தோல்வி அடைந்த இந்தியா இந்த ஒருநாள் தொடரிலும் அனுபவமில்லாத தென் ஆபிரிக்காவிடம் மீண்டும் மண்ணைக்கவ்வியது.

டெஸ்ட் தொடரில் பெற்ற தோல்விக்கு ஒருநாள் தொடரை வென்று கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி பதிலடி கொடுக்கும் என எதிர்பார்த்த இந்திய ரசிகர்களுக்கு இது சோகத்தையே ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஒருநாள் தொடரில் இந்தியாவின் மிடில் ஆர்டர் பேட்டிங் மோசம் என பார்த்தால் இந்தியாவின் பௌலிங் அதைவிட மோசமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் புவனேஸ்வர் குமார் முதல் 2 போட்டிகளில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை.

முதல் போட்டியில் 64 ரன்களை வாரி வழங்கிய அவர் 2ஆவது போட்டியில் 67 ரன்களை வழங்கினார். இப்படி மோசமாக பந்து வீசி வரும் புவனேஸ்வர் குமார் பற்றி இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய கவாஸ்கர் “இந்திய கிரிக்கெட்டில் புவனேஸ்வர் குமார் நிறைய பங்காற்றியுள்ளார். இருப்பினும் கடந்த சில வருடங்களாக ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் மோசமாக பந்து வீசி வருகிறார். அவரின் பந்துவீச்சு ஆரம்பத்திலும் சரியாக இல்லை இறுதியிலும் சரிவர அமையவில்லை. முன்பெல்லாம் மிகத்துல்லியமாக யார்க்கர் பந்துகளையும் மெதுவான பந்துகளையும் வீசும் அவரின் அந்த பந்துகள் இப்போது வேலை செய்வதில்லை.

எதிரணியினர் அவரின் பந்துவீச்சை கணித்து அடிக்கத் தொடங்கி விட்டதால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு பதில் மாற்று வீரரை பார்க்கும் நேரம் வந்துவிட்டது.

அனேகமாக தற்போது தீபக் சாஹருக்கு வாய்ப்பளிக்கும் நேரம் வந்துவிட்டதாக கருதுகிறேன். புவனேஸ்வர் குமார் போலவே பந்துவீசும் திறமை கொண்ட அவர் இளமையானவராகவும் உள்ளார். மேலும் கீழ் வரிசையில் பேட்டிங் செய்யும் திறமையையும் கொண்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை