சுரேஷ் ரெய்னாவை கவுரவித்த மாலத்தீவு; ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு, மாலத்தீவு அரசால் ஸ்போர்ட்ஸ் ஐகான் விருது வழங்கப்பட்டது. கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் நிகழ்த்திய சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிக முக்கியமான பிளேயராக தடம் பதித்தவர் சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ள ரெய்னா, ஐபிஎல் தொடரில் 5 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார்.
கடந்த 2011 இல் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதில், சுரேஷ் ரெய்னா இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்திருந்தார்.
இந்நிலையில் நடப்பாண்டிற்கான மாலத்தீவு ஸ்போர்ட்ஸ் விருதுகள் பிரிவின் கீழ், ஸ்போர்ட்ஸ் ஐகான் விருது அந்நாட்டு அரசால் சுரேஷ் ரெய்னாவுக்கு வழங்கப்பட்டது. அவருடன் சேர்த்து, 16 சர்வதேச விளையாட்டு வீரர்களின் பெயரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப் பட்டிருந்தது.
ஜமைக்கா ஓட்டப்பந்தய வீரர் அசஃபா பவல், இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா, பிரேசில் கால்பந்து வீரர் ராபர்டோ கார்லோஸ் மற்றும் டச்சு கால்பந்து ஜாம்பவான் எட்கர் டேவிட்ஸ் உட்பட 16 சர்வதேச விளையாட்டு வீரர்களுடன் ரெய்னா இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.
இந்த விருது நிகழ்வில், மாலத்தீவு டென்னிஸ் சங்கத்தின் கெளரவத் தலைவர் அகமது நசீர், மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் மொஹமட் சோலிஹ், விளையாட்டுத்துறை அமைச்சர் ,சவூதி அரேபியாவின் விளையாட்டுத்துறை துணை அமைச்சர் அல்-காதி பத்ர் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சமீபத்தில், ஐபிஎல் ஏலம் நடைபெற்றது. போதுமான பணம் இருந்து அவரை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் விருப்பம் காட்டாதது சிஎஸ்கே ரசிகர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது. மேலும், மற்ற அணிகளும் அவரை வாங்க விருப்பம் காட்டாததால் சுரேஷ் ரெய்னாவின் ஐபிஎல் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக ரசிகர்கள் கருதினர். தற்போது, சோகத்தில் இருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமான சுரேஷ் ரெய்னாவிற்கு, இந்த ஸ்போர்ட்ஸ் ஐகான் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.