டி20யை பொறுத்தமட்டில் சூர்யகுமார் யாதவ் தான் எனக்கு பிடித்த வீரர் - வாசிம் அக்ரம்!

Updated: Tue, Aug 23 2022 19:47 IST
Image Source: Google

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் 28ஆம் தேதி துபாயில் நடக்கிறது.

இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 3 முறை மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், இந்த தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் மிரட்டல் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா - ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய இருவரும் ஆடாதது இரு அணிகளுக்கும் பாதிப்பாக அமையும்.

இந்திய அணியிலாவது பும்ரா இல்லாதது அதிக பாதிப்பை கொடுக்காதவகையில் பார்த்துக்கொள்ள நல்ல பவுலர்கள் உள்ளனர். ஆனால் பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் அஃப்ரிடி தரத்திற்கு நிகரான மாற்று பவுலர் இல்லை. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி மற்றும் ஆசிய கோப்பை தொடர் குறித்து முன்னாள் ஜாம்பவான்கள் கலந்துகொண்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸில் விவாதித்துவருகின்றனர்.

அப்படியான ஒரு விவாதத்தில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம், “ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், கோலி ஆகிய சிறந்த வீரர்கள் இந்திய அணியில் இருக்கின்றனர். ஆனால் டி20 கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் சூர்யகுமார் யாதவ் தான் எனக்கு மிகவும் பிடித்த வீரர். மிக அருமையான வீரர் அவர். கேகேஆர் அணியில் சூர்யகுமார் இருந்தபோதுதான் முதலில் அவரை பார்த்தேன். அப்போது இரண்டேபோட்டிகளில் மட்டும்தான் பேட்டிங் ஆடினார். அதுவும் 7-8ஆம் பேட்டிங் வரிசையில் ஆடினார். ஃபைன் லெக் திசையில் ஒரு ஷாட் அடித்தார். நடு பேட்டில் பந்தை கனெக்ட் செய்து ஃபைன் லெக் திசையில் அடித்தார். மிகக்கடினமான ஷாட் அது. அதை அருமையாக ஆடினார்” என்று தெரிவித்தார்.

ஐபிஎல் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவ், 23 டி20 போட்டிகளில் ஆடி 672 ரன்கள் அடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி முதல் சதமடித்த சூர்யகுமார் யாதவ், 117 ரன்களை குவித்தார்.

மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடிய திறமை வாய்ந்தவர் சூர்யகுமார் யாதவ் என்பதால் இந்தியாவின் 360 என அழைக்கப்படுகிறார் சூர்யகுமார் யாதவ். சூர்யகுமாரை அண்மையில் ரிக்கி பாண்டிங்கும் புகழ்ந்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை