SA vs IND: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி சாதனையை சமன் செய்த சூர்யகுமார்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தனர். பின்னர் திலக் வர்மா - சூர்யகுமார் யாதவ் கூட்டணி இந்திய அணியை மீட்டது.
அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 20 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ரிங்கு சிங் நிதான் ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் சூர்யகுமார் யாதவ் பவுண்டரியும், சிக்சருமாய் விளாசினார். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் அடிக்கும் 4ஆவது அரைசதமாகும்.
அதேபோல் தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி கேப்டன் அடிக்கும் முதல் டி20 அரைசதம் இதுவாகும். அந்த சாதனையை சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 2 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ் படைத்துள்ளார். 1,283 பந்துகளில் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபின்ச் 2 ஆயிரம் ரன்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. அதனை தற்போது 1,164 பந்துகளில் கடந்து சூர்யகுமார் யாதவ் சாதனை படைத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இந்திய வீரர்களில் குறைந்த இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனை சமன் செய்து முதலிடத்தை பகிர்ந்துள்ளார் சூர்யகுமார் யாதவ். விராட் கோலியும், சூர்யகுமார் யாதவ் இருவரும் 56 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் 52 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ரன்களை கடந்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.