WI vs IND, 3rd T20I: சூர்யகுமார் அதிரடியால் விண்டீஸை வீழ்த்தியது இந்தியா!

Updated: Wed, Aug 03 2022 11:31 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றதால் 1 – 1 என்ற கணக்கில் தொடர் சமநிலை அடைந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது போட்டி செயின்ட் கிட்ஸ் & நேவிஸில் இருக்கும் வார்னர் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீசுக்கு ஆரம்பத்திலேயே நிதானத்தை வெளிப்படுத்தி 52 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் ப்ரெண்டன் கிங்கை 20 (20) ரன்களில் ஹர்திக் பாண்டியா கிளீன் போல்டாக்கினார். அப்போது களமிறங்கிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் பொறுப்பாக செயல்பட்டு 2ஆவது விக்கெட்டுக்கு மறுபுறம் சிறப்பாக செயல்பட்ட கெய்ல் மேயர்ஸ் உடன் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை வலுப்படுத்தினாலும் கடைசிவரை மெதுவாகவே பேட்டிங் செய்து 22 (23) ரன்களில் அவுட்டானார்.

இருப்பினும் மறுபுறம் 17 ஓவர்கள் வரை நங்கூரமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த தொடக்க வீரர் கெய்ல் மேயர்ஸ் 8 பவுண்டரி 4 சிக்சர்களை பறக்கவிட்டு அரைசதம் அடித்து 73 (50) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் 2 பவுண்டரி 1 சிக்சர் பறக்கவிட்ட ரோவ்மன் போவல் 23 (14) ரன்களிலும் 2 சிக்சரை விளாசிய ஷிம்ரான் ஹெட்மையர் 20 (12) ரன்களிலும் கடைசி ஓவரில் ஓரளவு நல்ல பினிஷிங் கொடுத்து ஆட்டமிழந்தனர். அதனால் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதைத்தொடர்ந்து 165 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு 1 பவுண்டரி 1 சிக்ஸரை பறக்க விட்ட கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்திருந்த போது முதுகு பிடிப்பு காரணமாக களத்திலிருந்து ரிட்டையர்ட் ஹர்ட்டாகி வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. அந்த நிலையில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயருடன் கைகோர்த்த மற்றொரு தொடக்க வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ரன்களை சேர்த்தார்.

இதில் ஒருபுறம் பெயருக்காக ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்ய மறுபுறம் சரவெடியாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவ் பவுண்டரிகளையும் சிக்சர்களையும் பறக்கவிட்டு இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 11.3 ஓவரில் 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த இந்த ஜோடியில் கடைசிவரை பொறுமையாகவே பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் ஐயர் 24 ரன்களில் நடையை கட்டினார். ஆனாலும் மறுபுறம் விதவிதமான ஷாட்களை விளையாடி வெளுத்து வாங்கிய சூர்யகுமார் யாதவ் 8 பவுண்டரி 4 சிக்சருடன் அரைசதம் அடித்து 76 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

அதனால் நல்ல தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு மிடில் ஆர்டரில் ஹர்திக் பாண்டியா 4 ரன்களில் அவுட்டானாலும் ரிஷப் பந்த் அதிரடியாக 3 பவுண்டரி 1 சிக்சருடன் 33 ரன்களும் தீபக் ஹூடா 10 ரன்களும் எடுத்து தேவையான பினிஷிங் கொடுத்தனர். இதன் காரணாமாக 19 ஓவரிலேயே இந்திய அணி இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்திய வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்தது. 

மேலும் இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றியை உறுதிசெய்த சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அதேசமயம் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலைப் பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை