தேவைப்பட்டால் 50 வயதுவரை கூட விளையாடுவேன் - இம்ரான் தாஹீர் ஆவேசம்!
பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில், அக்டோபர் மாதம் உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெற உள்ளது. அக்டோபர் 17 முதல் தொடங்கும் இத்தொடர் நவம்பர் 14ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.
இந்நிலையில், உலகக் கோப்பைக்கான வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன. நேற்று முன்தினம், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் நிர்வாகமும் தங்கள் அணி வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. ஆனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் ஃபாஃப் டூ பிளெசிஸ், இம்ரான் தாஹிர், கிறிஸ் மோரிஸ் உள்ளிட்ட வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பகிரங்கமாகவே இம்ரான் தாஹிர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய இம்ரான் தாஹிர் "நான் உலகக் கோப்பை அணியில் இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடந்த ஆண்டு கிரேம் ஸ்மித் என்னை தொடர்பு கொண்டு, 'உலகக் கோப்பையில் நீங்கள் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்' என்றார். அதற்கு நான், 'நீங்கள் எனக்கு மரியாதை அளிப்பதால் நான் உற்சாகமாகவும் கௌரவமாக இருக்கிறேன். உலகக் கோப்பையில் விளையாட நான் தயார். நான் கடினமாக உழைக்கிறேன்' என்றேன்.
அதற்கு அவர், அனைத்து கிரிக்கெட் லீக்குகளிலும் உங்கள் செயல்திறனை பார்த்ததால் தான் உங்களை தொடர்பு கொண்டு உலகக் கோப்பையில் விளையாட அழைக்கிறேன். மேலும் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் ஃபாஃப் டூ ப்ளெசிஸ் போன்றோருடனும் பேசப் போவதாக கூறினார். ஆனால் அதன் பின்னர் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
சில மாதங்களுக்குப் பிறகு நான் ஸ்மித் மற்றும் பவுச்சருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன், யாரும் எனக்கு பதிலளிக்கவில்லை. பவுச்சர் பயிற்சியாளரான பின்பு, அவருடைய திட்டங்கள் என்ன என்பதைச் சொல்ல அவர் என்னை ஒருமுறை கூட தொடர்பு கொள்ளவில்லை. இது மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் 10 வருடங்கள் நாட்டுக்கு சேவை செய்தேன், நான் பயனற்றவன் என்று நினைக்கும் இவர்களை விட நான் இன்னும் கொஞ்சம் மரியாதைக்கு தகுதியானவன் என்று நினைக்கிறேன்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
நான் எப்போதுமே தென்ஆப்பிரிக்காவிற்காக ஒரு உலகக் கோப்பையை வெல்ல வேண்டும், இந்த நாடு எனக்கு அளித்த வாய்ப்பிற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் நான் ஓய்வு பெறத் திட்டமிடவில்லை. நான் தேவைப்பட்டால் 50 வயது வரை விளையாடப் போகிறேன்" என்று ஆவேசமாக கூறியுள்ளார்.