தெறித்த ஸ்டம்புகள்; புது வேகத்தில் யார்க்கர் கிங்!
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் 26ஆம் தேதி முதல் மஹாராஷ்டிராவில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த முறை 10 அணிகள் பங்கேற்பதால், 2 குரூப்களாக பிரிக்கப்பட்டு புதிய தோற்றத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறவிருக்கிறது.
இந்தாண்டு ஐபிஎல் தொடர் சில இந்திய வீரர்களுக்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் ஃபிட்னஸ் பிரச்சினையால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள முன்னணி வீரர்கள், இதனை வைத்து தான் கம்பேக் கொடுக்கவுள்ளனர். அதில் மிகவும் முக்கியமானவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த யார்க்கர் கிங் நடராஜன்.
இந்திய அணியில் அசத்தி வந்த நடராஜன், காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். சையது முஷ்டக் அலி, விஜய் ஹசாரே போன்ற தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால், பிசிசிஐ தேர்வுக்குழுவின் கவனத்தை பெற முடியவில்லை. எனினும் அவர் மீது ஹைதராபாத் அணி அதீத நம்பிக்கை வைத்து வாங்கியுள்ளது.
இந்நிலையில் அதற்கு தகுந்த நம்பிக்கையை கொடுத்துள்ளார். நடராஜன் பந்துவீச்சில் பயிற்சி செய்யும் காணொளியை ஹைதராபாத் அணி வெளியிட்டுள்ளது. அதில் வெறிகொண்டு பந்துவீசும் நடராஜன் கொஞ்சம் கூட குறிமாறாமல் யார்க்கர் வீசுகிறார்.
மேலும் ஒரு பந்தில், ஸ்டம்ப் இரண்டாக உடைந்து பறந்த காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த சீசனில் தரமான சம்பவம் உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர்.
நடராஜனின் இந்த வேகத்திற்கு பின்னால் தென் ஆப்பிரிக்க புயல் டேல் ஸ்டெயின் இருக்கிறார் எனக்கூறலாம். அந்த அணியின் வேகப்பந்துவீச்சுக்கு என ஸ்பெஷல் பயிற்சியாளராக ஸ்டெயின் இணைந்துள்ளார். அவரின் ஆலோசனைகளின் படி இந்தாண்டு நடராஜனை மற்றொரு லெவலில் வைத்து பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.