டி20 லீக் தொடர்கள் சர்வதேச கிரிக்கெட்டிற்கு ஆபத்து - டூ பிளெஸிஸ்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் ஃபாஃப் டூ பிளெஸிஸ். இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். கரோனா தொற்றால் பாதி ஆட்டங்களுடன் பிஎஸ்எல் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் பிஎஸ்எல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் வருகிற 9ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகின்றன.
இந்நிலையில், டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் சர்வதேச கிரிக்கெட்டிற்கு ஆபத்து என டூ பிளெஸிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய டூ பிளெஸிஸ்,“டி20 கிரிக்கெட் லீக் தொடர்கள் சர்வதேச கிரிக்கெட்டிற்கு மிகப்பெரும் ஆபத்தாக மாறி வருகின்றன. ஏனெனில் இத்தொடர்கள் நாளுக்கு நாள் ரசிகர்களின் ஆதரவையும், வீரர்களின் ஆதரவையும் பெற்று வருவதால் சர்வதேச போட்டிகள் மீதான எதிர்பார்ப்பை குறைந்து வருகிறது.
ஏனெனில் பல அதிரடியான வீரர்கள் சொந்த நாட்டிற்கு விளையாடாமல் லீக் போட்டிகளில் விளையாட ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு உதாரணம் வெஸ்ட் இண்டீஸ் அணி. அணியில் மிகச் சிறந்த வீரர்கள் அனைவரும் தற்போது அணியிலிருந்து விலகி லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
இதனால் சர்வதேச போட்டிகளில் அந்த அணியால் சரியாக செயல்பட முடியாமல் தடுமாறி வருகிறது. தற்போது அந்த வரிசையில் தென் ஆப்பிரிக்க அணியும் இணைந்துள்ளது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்தார்.